சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு தொடர்பாக திமுக தலைவரை வரும் 25ந்தேதி அன்று காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேச உள்ள நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர்களான  தினேஷ் குண்டுராவ், உம்மன் சாண்டி உள்பட பலர் நாளை சென்னை வந்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த  இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி, அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு மற்றும் அரசியல் பேரங்கள் நடைபெற்று வருகின்றன. மற்றொருபுறம் திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக தரப்பில் முதல்வர் எடப்பாடி உள்பட பலர் தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்

இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தொகுதிப்பங்கீடு குறித்து வரும் 25ந்தேதி (நாளை மறுதினம்) திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேச இருப்பதாக கூறப்டுகிறது. இதையொட்டி, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தினேஷ் குண்டுராவ், கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் நாளை சென்னை வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து நாளை மாலை, தமிழக காங்கிரஸ் கமிட்டியின்  தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி,.  சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மாநிலத் தலைவர்கள் எம்.கிருஷ்ணசாமி, கே.வீ.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள்,  எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாநில செயல் தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளனர்.

அதைத்தொடர்ந்து, 25ந்தேதி திமுக தலைவரை சந்தித்து தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சு நடத்த உள்ளனர்.