லக்னோ:

ஹெல்மெட் இல்லாமல் பிரியங்கா காந்தியை ஸ்கூட்டரில் அழைத்துச் சென்றது தொடர்பாக, அந்த வாகனத்தின் உரிமையாளரான காங்கிரஸ் தலைவருக்கு உ.பி. மாநில போக்குவரத்து காவல்துறை ரூ. 6300 அபராதம் வசூலித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகிறது. உ.பி. மாநிலத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எஸ்.ஆா்.தாரபுரி என்பவர்  தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், தாரபுரி குடும்பத்தினரை சந்திப்பதற்காக உ.பி. மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த சனிக்கிழமை தாரபுரியின் வீட்டுக்கு சென்றாா். அவர் செல்வதை உ.பி. மாநில காவல்துறை தடுத்தது. . இதையடுத்து பிரியங்கா காரிலிருந்து இறங்கி நடந்து செல்லத் தொடங்கினாா். அப்போதும், காவல்துறையினர், பிரியங்கா காந்தியை தடுக்க முயற்சி செய்தனர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.

சுமாா் 3 கி.மீ. தூரம் நடந்து சென்ற பிரியங்கா, காங்கிரஸ் தலைவர் தீரஜ் குர்ஜார் உடன் இருசக்கர வாகனத்தில் ஏறி, பாலிடெக்னிக் கிராசிங் முதல் முன்ஷூலியா கிராசிங் வரை 30 நிமிடங்களில் சுமாா் 2 கிலோ மீட்டா் பயணித்து தாரபுரியின் வீட்டை அடைந்தாா்.

இதுதொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வைரலானது. இந்த நிலையில்,  பிரியங்காவும் அவருடன் பயணித்த காங்கிரஸ் நிா்வாகியும் தலைக்கவசம் அணியாமல் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து, அந்த வாகனத்தின் பதிவெண்ணைக் கொண்டு, வாகனத்தின் உரிமையாளரை கண்டுபிடித்த போக்குவரத்து காவல்துறையினர், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளருக்கு  ரூ.6,300 அபராதம் விதித்தது, வசூல் செய்தனர்.

இதுகுறித்து கூறிய  போக்குவரத்து காவல்துறை கண்காணிப்பாளா் பூா்ணேந்து சிங், ‘இரு நபா்கள் (பிரியங்காவும், காங்கிரஸ் நிா்வாகியும்) தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவின. அதையடுத்தே, அவர்கள் குறித்து ஆராயப்பட்டு,  அதன் உரிமையாளா் ராஜ்தீப் சிங்குக்கு அபராதம் விதிக்கப்பட்டது என்று விளக்கம் தெரிவித்து உள்ளார்.