மிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று குரல் கொடுத்த ரஜினிகாந்த், தற்போது கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். முன்னதாக டிசம்பர் 3ந்தேதி அன்று அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லன்னா… எப்போவுமே இல்லை… என்று பஞ்ச் டயலாக் பதிவிட்டு  அவரது ரசிகர்களை  மேலும் உசுப்பேத்தினார்.

ஆனால்,  ரஜினிகாந்தால், தனது மனைவி லதாவின், சட்டவிரோத செயல்களையே தடுக்க முடியாத நிலையில்,  இவரால் தமிழகத்தை எப்படி மாற்ற முடியும் என சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தனது மனைவி லதாவின்  நடவடிக்கை குறித்து உயர்நீதிமன்றம் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், செவிடன் காதில் ஊதிய சங்குபோல, லதாவை எச்சரித்து, நேர்மையாக நடக்கும்படி அறிவுறுத்த  முடியாத ரஜினி,  தமிழக மக்களை  எப்படி மாற்றப்போகிறார்…

ரஜினியின் அரசியல் ஆசைக்கு, அவரது குடும்பத்தினரே வித்திடுவதாகவும், குறிப்பாக லதாவின் வற்புறுத்தலே காரணம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.  அவரது ஆலோசனை யின்படியே நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாகவும் போயஸ் வட்டார தகவல்கள் பரவி வருகின்றன. ரஜினியின் அரசியல் குருவாக லதா ரஜினிகாந்தே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

2021 ஜனவரியில் கட்சியைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினி, டிசம்பர் 31ந்தேதி அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். தொடர்ந்து கட்சியின் ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும், மேலாளராக தமிழருவி மணியனையும் நியமனம் செய்துள்ளார். அவரது கட்சி, சின்னம் தொடர்பான தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த சூழலில்தான் மாத்துவோம், எல்லாத்தையும் என்று முழங்கிய ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தின் தலையின்மீது உயர்நீதிமன்றம், ஆஸ்ரம் பள்ளி விவகாரத்தில் மீண்டும் குட்டி உள்ளது. 

ரஜினியின் அரசியல் அறிவிப்பு – தமிழக அரசியல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

லதா ரஜினிகாந்த் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் சில வழக்குகளில் அவர் நீதிமன்றத்தின் கடும் எச்சரிக்கைக்கும் ஆளானார் என்பது அனைவருக்கும் தெரியும். அப்படி இருக்கும்போது, தற்போது ரஜினியின் கோச்சடையான் பட பைனான்ஸ் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

லதா ரஜினிகாந்த் வேளச்சேரியில் நடத்தி வரும் ஆஸ்ரம் பள்ளி வாடகை விவகாரம் பல ஆண்டுகளாக நீடித்து வருவது சென்னை வாசிகளுக்கு நன்றாகவே தெரியும். தமிழகம் முழுவதும் இந்த விவகாரம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.  இது தொடர்பான வழக்கில் கடந்த திங்கட்கிழமை (15-12-2020) தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம் லதா ரஜினிகாந்துக்கு, கடுமையான கண்டனங்களை தெரிவித்ததுடன்,  கெடு விதித்தும், உத்தரவிட்டது.

அதன்படி, ஏப்ரல் 2021 க்குள் சென்னையில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தை காலி செய்ய லதா செயலாளராக இருக்கும் ஸ்ரீ ராகவேந்திர கல்வி சங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 2021-22 கல்வியாண்டில் மாணவர்களை சேர்க்கவும் அதிரடியாக தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கு  கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்தே நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால்,  ராகவேந்திர கல்விச் சங்கத்தின் வந்தனா துக்ரைட் வெளியிட்டுள்ள அறிக்கையில், லதாவை அவமானப்படுத்தும் நோக்கிலேயே ஊடகங்கள் செய்திகள் வெளியிடுவதாக புலம்பியதுடன்,  உயர்நீதிமன்றத்தின் அவமதிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  ஆனால், நிலுவையில் உள்ள வாடகை மற்றும் டி.டி.எஸ் நிலுவைத் தொகை செலுத்தப்பட்டுள்ளதா என்றும், தகராறு தீர்க்கப்பட்டதா என்றும் அவர் தெளிவுபடுத்துவதை தவிர்த்துள்ளது.

இந்த சூழலில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தால்,  நடிகர் ரஜினிகாந்த் நடித்து தோல்வியை தழுவிய கோச்சைடையான் படத்திற்காக வாங்கப்பட்ட கடன் விவகாரம்  தொடர்பான வழக்கு மீண்டும் தூசி தட்டப்பட்டு உள்ளது.

லதா ரஜினிகாந்த் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2013ம் ஆண்டு வெளிவந்த படம் கோச்சடையான். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதன் காரணமாக படத்தயாரிப்பாளரான லதா ரஜினி காந்த் பெருத்த நஷ்டத்தை சந்தித்தார். இந்த படம் தயாரிக்க ஆட்பீரோ என்ற  நிறுவனத்திடம், நடிகர் ரஜினிகாந்தின் மனைவியான  லதா ரஜினிகாந்த் 10 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். படம் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடன் அடைக்கப்படவில்லை.

இதுதொடர்பாக ஆட்பீரோ நிர்வாகம் தரப்பில், ஒப்பந்தப்படி,  வாங்கிய கடன் தொகையை   திருப்பித் தருவதில், லதா ரஜினிகாந்த், தில்லுமுல்லு செய்து இழுத்தடித்து வந்தார். இதனால், பொறுமையிழந்த ஆட்நிர்வாகம் தரப்பில்,  கோச்சடையான் பட தயாரிப்பாளர்  லதாமீது புகார் அளித்தார்.

கடந்த  2014 டிசம்பரில், ஆட்பீரோ தரப்பில் லதா ரஜினிகாந்த்மீது, ரூ .10 கோடிக்கு மோசடி புகார்  பதிவு செய்யப்பட்டு வழக்கு நடைபெற்றது.  அப்போது, லதா ரஜினி தரப்பில், கோச்சைடையான்  படத்தின் தமிழக குத்தகை உரிமையை மீடியான் குளோபல் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் இயக்குநரான மனோகர் என்பவர் ஏஜென்சிக்கு விற்றதாகவும், அவர் பணத்தை கட்ட லதா உத்தரவாதம் அளித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால்,  மனோகர் மற்றும் லதா இருவரும் பின்னர் சட்டவிரோதமாக கோச்சடையான் படத்தின் உரிமையை  ஈரோஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்துக்கு  விற்றனர்.

கடன் விவகாரம் நிலுவையில் இருக்கும்போதே, லதா ரஜினி தரப்பில் இருந்து, படத்தை மற்றொரு நிறுவனத்துக்கு விற்கப்பட்ட விவகாரம், லதா ரஜினிகாந்த் எப்படிப்பட்டவர்,  அவரது தில்லாலங்கடி வேலை என்ன என்பதையும் உ லகுக்கு எடுத்துக்காட்டியது.

பின்னர் இந்த வழக்கு கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் சென்றது.   வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான  பெஞ்ச், லதா ரஜினிகாந்தின் மொள்ளமாரித்தனத்தை பார்த்து ஆடிப்போய்விட்டனர்.  லதாவை கடுமையாக சாடியதுடன், விசாரணை தினத்தன்று, பிற்பகலே அவர்  பதில் அளிக்க வலியுறுத்தியதுடன், அடுத்த   3 மாதத்திற்குள் லதா ரஜினிகாந்த் 6.2 கோடி ரூபாயை ஆட் பீரோ நிறுவனத்துக்கு செலுத்த வேண்டும் என்றும், மீறினால் நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும்  அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர். ( இந்த உத்தரவு வெளியானது 2018ம் ஆண்டு பிப்ரவரி 20ந்தேதி)

6.2 கோடி ரூபாய் கடன்: லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதி மன்றம் கெடு

இந்த கெடுவானது  இரண்டரை ஆண்டுகள் முடிந்து தற்போது 3வது ஆண்டை நெருங்கி உள்ளது. ஆனால், லதா ரஜினிகாந்த் இன்னும் பணத்தை ஆட்பீரோ நிறுவனத்துக்கு செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

தற்போது ஆட்பீரோ நிறுவனத்தின் சார்பில், உச்சநீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  ரஜினிகாந்தின் குடும்பத்தினர் நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்த உத்தரவிட்ட  உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பான வழக்கு விரைவில், விசாரணைக்கு வரும் என தெரிவித்து உள்ளனர்.

அதுபோல, கடந்த 2017ம் ஆண்டு, லதா ரஜினிகாந்த், சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டையில் உள்ள கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து, பின்னர் அதை மேல் வாடகைக்கு விட்டதுடன், நீதிமன்ற உத்தரவின்படி, உயர்த்தப்பட்ட வாடகைகயை செலுத்த மறுத்து, நீதிமன்றத்தை நாடியதும்,  நீதிமன்றம் லதா ரஜினிக்கு கடும் எச்சரிக்கை விடுத்ததுடன், கடையை காலி செய்யவில்லை என்றால், காவலர்கள் துணையோடு காலி செய்யுங்கள் என்று கோபமாக கூறியதும் நினைவிருக்கலாம். 

ஏற்கனவே ரஜினிகாந்த், கோடம்பாக்கம் திருமண மண்டபத்துக்கு வரி செலுத்த மறுத்து, நீதிமன்றத்தை நாடிய நிலையில்,  விஷயம் பூதாகாரமாகி, பின்னர் நீதிமன்றம் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அவர் வழக்கை  வாபஸ்பெற்றதும், தமிழகத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தமிழக மக்களிடையே ரஜினியின் நடவடிக்கை கேலிப்பொருளானது.

அதுபோல, கொரோனா பொதுமுடக்கத்தின்போது, ரஜினிகாந்த், உடல்நலத்தை காரணம் காட்டி, போலி இ-பாஸ் பெற்றுக்கொண்டு, தனது பண்ணை வீட்டுக்கு சென்ற விவகாரமும், சமுக வலைதளங்களில் நாறடிக்கப்பட்டது. ரஜினியின் உபதேசம், ஊருக்குத்தான், அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கிடையாது  என கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ரஜினிகாந்த் மீதும், அவரது குடும்பத்தினர் மீது ஏராளமான புகார்கள் உள்ள நிலையில், ரஜினிகாந்தோ,  மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம் என்று வாய்ச்சவடால் விட்டு வருகிறார். 

ஒவ்வொரு முறையும் அரசியல் அறிவிப்பு வெளியிட்டு, தனது ரசிகர்களை சந்தித்து பேசுவதாக பாவ்லா காட்டி, தனது படங்களை வெற்றிப்படங்களாக ஓட்டும், ஒரு தொழிலதிப ராகவே இருந்து வந்துள்ள ரஜினி, தற்போதும், தனது தள்ளாத வயதிலும் படத்தில் நடித்துக்கொண்டு, கோடிக்கணக்கான ரூபாயை கல்லாக்கட்டி வருகிறார். இதை யாராலும் மறுக்க முடியாது. தற்போது, அண்ணாத்த படத்தை முடித்துவிட்டு அரசியலுக்கு வருகிறேன் என்றுதான் தெரிவித்து உள்ளார். அவர் ஏற்கனவே அறிவித்துள்ளபடி, ஜனவரியில் கட்சியைத் தொடங்குவாரா என்பதும் கேள்விக்குறிதான்.

ஆனால், தன்னை யோக்கியவனாக காட்டிக்கொள்வதில், அவர் அதிக அக்கறை காட்டி வருவது தெள்ளத்தெளிவாகவே தெரிகிறது. முதலில் சிஸ்டம் சரியில்லை, என்று கூறியவர், தற்போது, மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லன்னா… எப்போவுமே இல்லை.. என கூறியிருக்கிறார்.

ஆனால், அவர்மீதும், அவர்மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது உள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து, ரஜினி இதுவரை எந்தவித விளக்கமும் கொடுக்கவில்லை.  தனது மனைவியை கண்டிக்க திராணி இல்லாத ரஜினி,  திராவிட தேசத்தில் ஆன்மீக அரசியலைத் தொடங்கத் தயாராக இருப்பதாகவும், தான்   ஒரு சுத்தமான மற்றும் நேர்மையான ஆளுமை என்ற பிம்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஆனால், அவரது அரசியல் வாழ்க்கைக்கு, அவரது மனைவி லதா ரஜினி மீதான குற்றச்சாட்டுக்கள், அது தொடர்பான நீதிமன்ற வழக்குகள், கடும் தொந்தரவை கொடுக்கும் என்பதில் சந்தேகமல்லை. தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை அதனால் ஆன்மிக அரசியலுக்கு வருவதாக கூறும் ரஜினிகாந்த், முதலில் தனது மனைவியின் தில்லுமுல்லுகளை தடுத்து நிறுத்திவிட்டு அரசியலுக்கு வர  வேண்டும் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக மக்களிடையே அனுதாபத்தை பெறும் நோக்கில், அரசியல் களத்தில் மதத்தை புகுத்தும் நோக்கில், பாரதியஜனதா கட்சியின் பினாமியா,  ஆன்மிக அரசியல் என்ற பெயரில், பசுத்தோல் போர்த்திய புலியாக வரும் வருகிறார் ரஜினிகாந்த்.  அவருக்கு கைத்தடிகளாக சில பல முன்னாள்கள் ஜால்ரா அடித்து வருகின்றனர்.  தற்போது ஆன்மிக அரசியல் என்ற  மாயையில் சிக்கியுள்ள ரஜினிக்கு உண்மையான அரசியல் என்ன என்பது இன்றுவரைக்கும் புரியவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

ரஜினி அரசியல் – அதிமுகவுக்கு சாவுமணியா? பாஜகவின் தேர்தல் வியூகமா?

ஆனால், தமிழக சட்டமன்ற தேர்தலில்தான், ரஜினியின் உண்மையான அரசியல் என்பதை அவர் கற்றுக்கொள்ள நேரிடும் என்றும், லதா ரஜினியின்  வழக்குகளால், அவரது முகத்திரை கிழியும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

லதா மீது நிலுவையில் உள்ள  வழக்குகள்  மீண்டும் தூசிதட்டப்பட்டு உள்ள நிலையில், ரஜினியால் அரசியல் களத்தில் நின்று வாக்குகளை வேட்டையாட முடியமா? அரசியல் கட்சிகளின் கேள்விகளுக்கு அவரால் பதில் கூற முடியுமா? என்பதும் மில்லியன் டாலர் கேள்வி…

தற்போதைய நிலையில், ரஜினியின் அரசியல் குருவாக லதா ரஜினிகாந்தே இருந்து வரும் நிலையில்,  மனைவி ‘லதா’வின் தில்லுமுல்லு களையே மாற்ற முடியாத ரஜினிகாந்தால், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?

பொறுத்திருந்து பார்ப்போம்.