டில்லி

தேனி தேர்தலில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்னும் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது

தேனி தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76,319 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அந்த தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் ஓபி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

மிலானி தனது மனுவில் ஓ பி ரவீந்திரநாத் தாக்கல் செய்திருந்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்கள், கடன் விவரங்களை மறைத்துள்ளார். மேலும் தொகுதியில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா அதிகம் நடந்தது. அதனால் அந்த தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் விசாரணைக்குப் பின்னர் ஓ.பி. ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது எனத் தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய அவருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து தனது வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தேர்தல் வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. இன்னும்  2 வாரங்களில் இரு தரப்பினரும் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணை வரும் அக்டோபர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.