டில்லி

ரு சக்கர வாகனங்களுக்கு 5 வருடமும் கார்களுக்கு 3 வருடமும் விற்கும் போதே காப்பீடு எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.

காப்பீடு தகவல் மையத்தின் அறிக்கைப்படி மொத்தமுள்ள 18 கோடி வாகனங்களில் சுமார் 6.5-7 கோடி வாகனங்களுக்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டுள்ளது.   அரசு அதிகாரிகள் தற்போது சாலையில் புழக்கத்தில் உள்ள வாகனங்களில் 50% க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு காப்பீடு இல்லை எனவும் அதில் பெரும்பாலானவை இரு சக்கர வாகனங்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதில் மூன்றாம் நபர் காப்பீடு மூலம் வாகனங்களில் அடிபடுவோருக்கு காப்பீட்டு தொகை வழங்கப் படுகிறது.   அவ்வாறு காப்பீடு இல்லாதவர்களிடம் ரூ.1000 அபராதம் அல்லது மூன்று மாத சிறைத்தண்டனை வழங்கும் சட்டமும் அமுலில் உள்ளது.    ஆயினும் பல வாகன உரிமையாளர்கள் காப்பீடு எடுக்காமலே உள்ளனர்.

இது குறித்து உச்சநீதிமன்றம் வாகனங்கள் விற்பனை செய்யும் போதே இருசக்கர வாகனங்களுக்கு 5 வருடங்களுக்கும் 4 சக்கர வாகனங்களுக்கு 3 வருடங்களுக்கும் காப்பீடு எடுத்து தர வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளது.    மேலும் இதனால் அதிக செலவாகாது எனவும் தெரிவித்துள்ளது.

ஆனால் காப்பீடு நிறுவனங்கள் வேறு ஒரு யோசனை தெரிவிக்கின்றன.  ”தற்போது வாகன பதிவு 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என சட்டம் உள்ளது.  அதற்கு பதிலாக ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் என சட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.   அதன் மூலம் ஒவ்வொரு முறை வாகனம் புதிப்பிக்கும் போதும் காப்பீடும் புதிப்பிக்கப்படும்.   இதனால் 100%  வாகனங்களும் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வந்து விடும்.    தற்போது சில வாகன நிறுவனங்கள் இரு சக்கர வாகனங்களுக்கு மூன்றாண்டு காப்பீடு பரிந்துரைத்தாலும் பலர் அதை ஏற்பதில்லை” என தெரிவித்துள்ளனர்.