டில்லி:

காவிரி நதி நீர் விவகாரத்தில் 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால், 6 வாரம் கடந்தும் அதற்கான முயற்சி எடுக்காத மத்திய அரசு, கடந்த சனிக்கிழமை, உச்சநீதி மன்ற தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன என்று விளக்கம் கேட்டு மனு அளித்துள்ளது.

இந்நிலையில், உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க தமிழகம் சார்பில் முறையிடப்பட்டது.

அப்போது விளக்கமளித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, தமிழகத்தின் நிலையை புரிந்துகொள்ள முடிகிறது. தமிழகத்திற்கான நீர் கண்டிப்பாக கிடைக்கும். இந்த வழக்கை அடுத்த வாரம் திங்கட்கிழமை(9ந்தேதி) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதி மன்றம் அறிவித்து உள்ளது.

மேலும், உச்சநீதிமன்ற தீர்ப்பில்  குறிப்பிட்டுள்ள  ஸ்கீம் என்ற வார்த்தை காவிரி வாரியத்தை மட்டும் உள்ளடக்கி யது அல்ல. காவிரி விவகாரம் தொடர்பான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது.  மேலாண்மை வாரியம் என குறிப்பிடவில்லை என கூறியுள்ளார்.

தமிழகத்திற்கு இது பெரிய பிரச்சினை தான், தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா  உறுதி அளித்துள்ளார்.

தமிழகத்திற்கான காவிரி நீர் கண்டிப்பாக கிடைக்கும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பது,  தற்போது தமிழகம் முழுவதும்  போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழர்களை சாந்தப்படுத்தவா அல்லது வஞ்சிக்கப்படும் தமிழகத்திற்கு உரிய நிவாரணம் வழங்கும் எண்ணத்திலா என்பது அடுத்தக்கட்ட விசாரணையின்போது தெரிய வரும்.