துமக்கூரு, கர்நாடகா

பெங்களூரு அருகில் உள்ள துமக்கூரு சித்தகங்கா மடத்தின் மடாதிபதி சிவகுமார சாமியின் 111 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.

பெங்களூருவில் இருந்து சுமார் 70 கிமீ தூரத்தில் உள்ளது துமக்கூரு.   இங்கு லிங்காயத்துகளின் மடமான சித்த கங்கா மடம் அமைந்துள்ளது.   இந்த மடத்தின்மடாதிபதி சிவகுமார சாமி.   இவர் கடந்த 1907 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி பிறந்தவர்.    இவர் தனது மடத்தின் மூலம் பல கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார்.   அது தவிர சமஸ்கிருதம் மற்றும் வேதம் சொல்லித் தரும் பாடசாலையையும் நடத்தி வருகிறார்.

கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று சிவகுமார சாமியை பாஜக தலைவர் அமித்ஷா சந்தித்தார்.  அப்போது அவர், “வரப்போகும் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற அவரிடம் ஆசியைக் கோரி இந்த சந்திப்பை நடத்தினேன்.    அவரைப் பார்க்கும் போது எனக்கு கடவுளையே பார்ப்பது போல் தோன்றியது” எனக் கூறி உள்ளார்.  கர்நாடகாவை ஆளும் காங்கிரஸ் அரசு லிங்காயத்துக்களை தனி மதத்தினர் என அங்கீகரித்த ஒரு வாரத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது குறிப்பிடத் தக்கது.

நேற்று அவரது 111 ஆவது பிறந்தநாள் விழாவில் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் கலந்துக் கொண்டுள்ளனர்.  “நடமாடும் கடவுள்”  எனவும் மகான் பசவப்பாவின் மறு அவதாரம் எனவும் பக்தர்களால் போற்றப்படும் சிவகுமார சாமிக்கு கடந்த 2015 ஆம் வருடம் மத்திய அரசு பத்மபூஷன் விருது அளித்து கௌரவப்படுத்தியது.