டெல்லி
தக்லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
கடந்த 5 ஆம் தேதி மணிரத்னம் – கமலஹாசன் கூட்டணியில் வெளியான திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் கமலஹாசனுடன் இணைந்து சிம்பு, திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்றது.
படத்தின் இசை வெளியீட்டு விழாவில், தமிழில் இருந்து கன்னடம் தோன்றியது என்று கமல் கூறியதற்கு கன்னட அமைப்புகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்ப, தொடர்ந்து கமல்ஹாசனிடம் கர்நாடக வர்த்தக சபை மன்னிப்பு கேட்க கோரியது. கமல் அதற்கு மறுக்க தக் லைஃப் படம் வெளீயீட்டுக்கு கர்நாடக வர்த்தக சபை தடை விதித்தது.
தக் லைஃப் படக்குழு படத்தின் வெளியீட்டை கர்நாடகாவில் ஒத்தி வைத்தது. இந்நிலையில் மகேஷ் ரெட்டி என்பவர் கர்நாடகத்தில் திரையிட விதித்த தடையை எதிர்த்த ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் இன்று (ஜுன் 17) விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் நடைபெற்ற விவாதம் பின்வருமாறு,
நீதிபதிகள்:-
“குண்டர்கள், கும்பல்கள் நமது வீதிகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது. எவர் ஒரிவரும் திரைப்படத்தை வெளியிட உரிமை உண்டு. அந்த திரைப்படத்தை பார்த்து மக்கள் முடிவு செய்யட்டும். திரைப்படத்தை வெளியிடுவதை தடை செய்ய முடியாது. எனவே அரசு இது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும். உரிய விளக்கத்தை தெரிவியுங்கள். துப்பாக்கி முனையில் வைத்து முதலில் சரி செய்யுங்கள், அதன்பின் திரைப்படத்தை வெளியிடுங்கள் என கூற முடியாது. உரிய சான்றிதழ் பெற்ற பின்னர் எந்த ஒரு திரைப்படத்தையும் தடை செய்ய முடியாது. அரசு அதனை உறுதி செய்ய வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் படத்தை பார்த்த பின்னர் மக்கள் அதனை ஏற்க வேண்டுமா? இல்லையா? என்பதை முடிவு செய்வார்கள்”
எதிர் மனுதாரர்கள் தரப்பு:-
“மக்களின் உணர்வு பூர்வமான விஷயம் என்பதால் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்”
நீதிபதிகள் :-
“ஒரு திரைப்படம் தடையில்லா சான்றிதழ் பெற்றிருந்தால் அதனை எந்த பிரச்னையும் இல்லாமல் திரையிடுவதற்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். எனவே சட்டத்தின் படி அனைத்தும் நடைபெற வேண்டுமே தவிர சிலரின் விருப்பு வெறுப்புக்கு ஏற்றார் போல் நடைபெறக்கூடாது. எனவே இந்த திரைப்படத்தை திரையிடும் விவகாரம், பாதுகாப்பு விவகாரம் தெரடர்பாக வரும் வியாழக்கிழமைக்குள் கர்நாடக அரசின் கருத்தை கேட்டு தெரிவிக்க வேண்டும். சிலர் பயமுறுத்துவதால் ஒரு திரைப் படம் வெளியிடாமல் இருப்பதை ஏற்க முடியாது. திரைப்படத்தை வெளியிட ஒருவருக்கு முழு அதிகாரமும் உள்ளது. CBFC சான்றிதழ் உள்ள ஒருபடத்தை திரையிட கூடாது என கூற முடியாது. படம் வெளியான பிறகு பொதுமக்கள் படத்தை வந்து பார்க்காமல் இருக்கலாம். ஆனால் அதற்காக படத்தை தடை செய்வது ஏற்புடையதல்ல”