சென்னை: ‘அகமதாபாத்தில் நடைபெற்ற ஏர் இந்தியா விமான விபத்து ரொம்ப வருத்தமான விஷயம். என சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து ஜூன் 12ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து தீப்பற்றி எரிந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயணித்த 241 பேர் உயிரிழந்தனர். மேலும் விமானம் கல்லூரி விடுதியின் மீது விழுந்ததால் விமானத்தின் எரிந்த பாகங்கள் விழுந்து அந்த வளாகத்தில் இருந்தவர்களும் உயிரிழந்தனர். மருத்துவமனையில் சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 270 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையில், விமான விபத்தினால் ஏற்பட்ட பெரும் தீயினால், உயிரிழந்தவர்களின் உடல்களில் பல அடையாளம் காண முடியாத அளவுக்கு உருக்குலைந்ததால், டி.என்.ஏ. சோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 92 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 47 உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. பலரின் உடல்களை அடையாளம் காண முடியாததால், உடலை பெறுவதற்காக கடந்த 5 நாட்களாக அவர்களின் உறவினர்கள் ஆம்புலன்ஸுடன் மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் வெளிநாடுகளுக்கு சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று விமானம் சென்னை வந்தடைந்தார். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் ரஜினி காந்திடம் அகமதாபாத் விமான விபத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்தவர், “ரொம்ப வருத்தமா இருக்கு.. ஆண்டவன் அருளால் இனி இதுபோன்ற விபத்துகள் நடக்காம இருக்கணும்” என்றார்.