டில்லி

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு ரூ. 10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரித்து வருகிறது.  இவ்வாறு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான நஷ்ட ஈடு வழங்கப்படுகிறது.   இது குறித்து தேசிய சட்ட சேவை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை சட்ட வரைவு திட்டத்துடன் தாக்கல் செய்தது.   அதில் நாடெங்கும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான நஷ்ட ஈடு வழங்க கோரிக்கை விடப்பட்டிருந்தது.

இதற்கு உச்சநீதிமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.   அந்த தீர்ப்பில், “கூட்டு பலாத்காரம் உட்பட பலாத்காரத்துக்கு ஆளாக்கப்படும் பெண்களுக்கு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.   அத்துடன் இயற்கைக்கு மாறான பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாகும் பெண்களுக்கு ரூ. 4 லட்சத்தில் இருந்து ரூ.7 லட்சம் வரை நஷ்ட ஈடு அளிக்க வேண்டும்.

திராவக வீச்சில் 50% அதிகமான காயம் அடையும் பெண்களுக்கு ரூ. 5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.   இதே போல தீ வைத்து எரிக்கப்படும் பெண்களுக்கு இந்த நஷ்ட ஈடு வரைமுறை பொருத்தமானது.   இந்த வரைமுறை நாடு முழுவதும் உடனடியாக செயல் படுத்தப் பட வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.