சின்மயானந்த் ஜாமீனுக்கு எதிரான மனு தள்ளுபடி

Must read

உத்தரப்பிரதேசம்:

த்தரப்பிரதேச மாநிலத்தில் இருபத்தி மூன்று வயது சட்ட மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சா் சின்மயானந்திற்கு அலகாபாத் உயா்நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், நவீன் சின்ஹா ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது. அப்போது, நீதிபதிகள் அமா்வு, ‘சின்மயானந்திற்கு ஜாமீன் அளித்த அலாகாபாத் உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் உரிய காரணங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால், இதில் தலையிட வேண்டிய தேவை எழவில்லை’ எனத் தெரிவித்தது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆசிரமங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நடத்தி வரும் சின்மயானந்த் முன்னாள் மத்திய பாஜக அமைச்சர் ஆவார். அவர் நடத்தி வந்த சட்டக் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவர் சின்மயானந்த் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினார். தான் குளிக்கும்போது எடுத்த புகைப்படத்தைக் காட்டி மிரட்டி தன்னை ஒரு வருடமாக சின்மயானந்த் பலாத்காரம் செய்வதாகப் புகாரில் தெரிவித்தார்.

மேலும் அந்தப் பெண் தன்னை ஒவ்வொரு முறையும் சின்மயானந்தின் ஆட்கள் துப்பாக்கி முனையில் அழைத்து வந்ததாகவும் தன்னை பலாத்காரம் செய்ததைக் கண் கண்ணாடியில் காமிரா பொருத்திப் பதிவு செய்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அந்தப் பெண் திடீரென காணாமல் போய் மீண்டும் நீதிமன்ற உத்தரவின் பேரில் கண்டு பிடிக்கப்பட்டார்.

அதன் பிறகு சின்மயானந்திடம் விசாரணை நடந்தது. பூட்டிய அறையில் நடந்த அந்த விசாரணை வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. சின்மயானந்த் இது அரசியல் விரோதம் காரணமாக அளிக்கப்பட்ட பொய்ப் புகார் எனக் கூறி வந்துள்ளார். மேலும் அந்தப் பெண் தன்னிடம் பணம் பறிக்க முயன்றதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே, சின்மயானந்திடம் 5 கோடி  ரூபாய் மிரட்டிப் பணம் பறிக்க மாணவியும், அவரது நண்பா்களும் முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சிறப்புப் புலனாய்வு குழுவினா் மாணவியைக் கைது செய்தனா். அவருக்கு கடந்த ஆண்டு டிசம்பா் 4-ஆம் தேதி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், பாலியல் தொந்தரவு வழக்கில் அலாகாபாத் உயா்நீதிமன்றம் சின்மயானந்திற்கு கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. அந்த உத்தரவில், ‘இரு தரப்பினரும் தங்களது எல்லையை மீறியுள்ளனா். தற்போதைய நிலையில், யாா் யாரை ஏமாற்றினாா் என்று தீா்ப்பு தருவது மிகவும் கடினம். உண்மையில், இருவரும் ஒருவரை ஒருவா் பயன்படுத்திக் கொண்டுள்ளனா்’ எனத் தெரிவித்திருந்தது.

More articles

Latest article