டில்லி

விதி எண் 370 நீக்கத்தை எதிர்த்து அளிக்கப்பட்டுள்ள மனுக்களில் பல அர்த்தமற்றவையாக உள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த ஐந்தாம் தேதி அன்று மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 மற்றும் 35 ஏ ஆகியவற்றை நீக்கம் செய்தது.   இதற்கு நாடெங்கும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.   காஷ்மீர் மாநிலத்தில் முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.  மேலும் தொலை தொடர்பு சாதனங்கள் மற்றும் இணைய சேவை முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது.

இவற்றை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஆறு மனுக்கள் பரிசீலைனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.  அதில் ஒன்றான காஷ்மீர் டைம்ஸ் ஊடக ஆசிரியர் அனுராதா பாசின் அளித்த மனுவில் ஊடகவியலர்கள் காஷ்மீருக்குள் செல்ல  தடையை நீக்கக் கோரியும் தொலைத் தொடர்பு துண்டிப்பு பற்றியும் இருந்தது.

இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், “அனேகமாக இன்று  மாலை தொலைத்தொடர்பு மற்றும் இணையத்துக்கான தடைகள் நீக்கப்பட்டுவிடும் என எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  எனத் தெரிவித்தார்.  இதற்குத் தலைமை வழக்கறிஞர் கே கே வேணுகோபால் காஷ்மீர் டைம்ஸ் தனது செய்தித்தாள்களை ஜம்மு வில் அச்சிட எவ்வித தடையும் பிறப்பிக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் அவர் மத்திய அரசு விரைவில் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பும் எனத் தெரிவித்துள்ளதாகவும் இந்நிலையில் உச்சநீதிமன்றம் இந்த மனுக்கள் குறித்து எவ்வித முடிவும் எடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.   மற்றொரு அரசு வழக்கறிஞரான துஷார் மேத்தா, “பாதுகாப்புத் துறை தற்போதைய நிலையை நன்கு கையாண்டு வருவதாகவும் நீதிமன்றம் இந்த துறையை நம்ப வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் 370 நீக்கம் குறித்த மனுக்கள் குறித்து, “மனுதாரர் ஜனாதிபதியின் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் தெரிவிக்கவில்லை.  அவர்கள் கோரிக்கை என்ன என்பதைத் தெரிவிக்காமலே மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான அர்த்தமற்ற மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது முடியாத காரியம்.   எனவே இந்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது” என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.