பாபர் மசூதி இடிப்பு வழக்கு: விசாரணையை ஏப்ரல் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

Must read

டில்லி,

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானியும், ஜோசியும் ஏப்ரல் 6 ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992–ம் ஆண்டு இடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் குற்றச்சதியில் ஈடுபட்டதாக பா.ஜ.க  தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி,  கல்யாண் சிங் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. அமைப்பு மேற்கண்ட தலைவர்கள் உள்பட 21 பேர் மீது ரேபரேலி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அத்வானி, ஜோஷி உள்ளிட்ட 13 பேரை விடுவித்தது. இந்த தீர்ப்பை அலகாபாத் நீதிமன்றம் உறுதி செய்தது. எல்.கே.அத்வானி, உமாபாரதி, உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நேற்று நீதிபதி பி.சி.கோஸ் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி ஆர்.எப்.நாரிமன் நீதிமன்றத்துக்கு வராத காரணத்தால் இன்று விசாரணை நடைபெறும் என நீதிபதி பி.சி.கோஷ் தெரிவித்தார்.  இதனிடையே, வழக்கு விசாரணையை 4 வார காலத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று அத்வானி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வேணுகோபால் கோரிக்கை வைத்தார்.

இந்நிலையில் வழக்கு இன்று நீதிபதிகள் பி.சி.கோஸ் மற்றும் ஆர்.எப்.நாரிமன் அடங்கிய பெஞ்ச் முன்னர் வந்தது. அப்போது நீதிபதிகள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் குற்றம் சாட்டப்பட்ட பிறர் எழுத்துப்பூர்வமான வாதத்தை ஏப்ரல் 6-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

 

More articles

Latest article