டில்லி

தாஜ்மகாலுக்கு உரிமை கோரும் வக்ப் வாரியம் அதை நிரூபிக்க ஷாஜகான கையெழுத்திட்ட பத்திரத்தை தர வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது.

ஆக்ராவில் உள்ள புகழ்பெற்ற தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்று எனக் கருதப்படுகிறது.     அதற்கு உத்திரப் பிரதேச சுன்னி வக்ப் வாரியம் உரிமை கொண்டாடி வருகிறது.     இதற்காக அந்த வக்ப் வாரியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.   அந்த வழக்கில் மறைந்த ஷாஜகான் இந்தக் கட்டிடத்தை வக்ப் வாரியத்துக்கு எழுதிக் கொடுத்து விட்டதாக வாதாடப் பட்டது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கீழ் உள்ள அமர்வு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.   தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “ஷாஜகான் இறக்கும் போது இந்தக் கட்டிடத்தை வக்ப் வாரியத்துக்கு எழுதிக் கொடுத்ததாக எப்படி சொல்ல முடியும்?  அவர் இறக்கும் போது சிறையில் அடைபட்டிருந்தார்.   அவரால் அந்த கட்டிடத்தை தொலைவில் இருந்து பார்க்க மட்டுமே முடிந்தது.

தாஜ்மகால் உட்பட பல முகலாய மன்னர்கள் கட்டிய கட்டிடங்கள் பிரிட்டிஷ் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன.  சுதந்திரத்துக்குப் பின் அது இந்திய அரசின் கட்டுப்பட்டுக்குள் வந்துள்ளது.

நீங்கள் கூறியது போல் அது உங்களுக்கு சொந்தம் என்றால் கி. பி. 1666ஆம் வருடம் மரணம் அடைந்ததாக சொல்லப்படும் ஷாஜகான் எழுதிக் கொடுத்த ஒரிஜினல் பத்திரத்தை இன்னும் ஒரு வாரத்துக்குள் வக்ப் வாரியம் நீதிமன்றத்துக்கு அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்..