டில்லி

டார்ஜிலிங் பகுதியில் உள்ள எல்லைக் காவல் படையினரை மத்திய அரசு திரும்ப அழைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

டார்ஜிலிங் பகுதியில் கூர்க்காலாந்து என்னும் தனி மாநிலம் கேட்டு கூர்க்கா இனத்தை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  அதனால் கடும் வன்முறை வெடிக்கவே அங்கு பாதுகாவலுக்கு 15 கம்பெனிகள் கொண்ட மத்திய எல்லைக் காவல் படையினர் அனுப்பப் பட்டனர்.  தற்போது ஹிமாசலப் பிரதேசம் மற்றும் குஜராத் மாநில தேர்தலுக்கு பாதுகாப்புக்கு தேவைப்படுவதால் இவர்களை திரும்ப அழைக்க மத்திய அரசு திட்டமிட்டது.

கொல்கத்தா உயர்நீதிமன்றம் மேற்கு வங்க அரசின் வேண்டுகோளுக்கிணங்க காவல்படையை திருப்பி அழைக்க மத்திய அரசுக்கு தடை விதித்தது.  இதையொட்டி மத்திய அரசு படையினரைத் திருப்பி அழைக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தது.  இதை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வு தற்போதுள்ள 15 கம்பெனிகளில் 7 கம்பெனி பாதுகாவலர்களை திருப்பி அழைத்துக் கொள்ள மத்திய அரசுக்கு அனுமதி வழங்கி உள்ளது.  மத்திய அரசு அனைத்து கம்பெனிகளையும் திரும்ப அழைத்துக் கொள்வது பற்றி மேற்கு வங்க அரசு இன்னும் 7 நாட்களுக்குள் தங்கள் கருத்தை சொல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.