ரியாத்:  மசூதிகளில் இப்தார் விருந்துகள் நடத்த தடை விதித்துள்ள  சவூதி அரேபிய அரசு மசூதி வளாகத்திற்குள் கேமராக்கள் மற்றும் புகைப்படம் எடுக்கவும் தடை போட்டுள்ள துடன், ஆன்லைன் உட்பட எந்த ஊடக தளத்திலும் பிரார்த்தனைகளை ஒளிபரப்பவும் அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.

இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோப்பு இருப்பது வழக்கமான நடவடிக்கை. இஸ்லாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமான ரமலான் இஸ்லாமிய மதத்தின் புனிதமான மாதங்களில் ஒன்றாகும்.  அந்த காலக்கட்டத்தில், இஸ்லாமியர்கள் சூரிய உதயம் முதல் மறைவு வரை உண்ணாவிரதம் இருப்பது வழக்கம். மாலையில் நோன்பை முடித்துக் கொள்ளும் பொருட்டு உணவு உண்ணும் நிகழ்வை குறிக்கும். நோன்பை முடித்துக் கொள்பவர்கள் ஒன்றாகக் கூடி இவ் உணவை உண்பது வழக்கம். இது ஞாயிறு மறைந்த பின்னரே உட்கொள்ளப்படுகிறது.

இந்தியாவில், ரமலான்  2024 மார்ச் 11ம் தேதி அன்று மெக்காவில் சந்திரனைக் கண்டதைத் தொடர்ந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு மாத கால உண்ணாவிரத காலம் 2024 ஏப்ரல் 9ம் தேதி அன்று முடிவடையும். இந்த நிலையில் , சவூதி அரேபியாவில் எதிர்வரும் ரமலான் பண்டிகையை (Ramadan) முன்னிட்டு மசூதிகளில் இப்தார் விருந்து நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக  இஸ்லாமிய விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “மசூதிகளின் தூய்மையைக் கருத்தில் கொண்டு இப்தார் விருந்துகளை மேற்கொள்ளக் கூடாது” என்று சவுதி அரேபிய அரசாங்கம் வலியுறுத்தியது. கூடுதலாக, மசூதிகளின் முற்றங்களில் ஒரு “பொருத்தமான இடத்தில்” இமாம்கள் மற்றும் முஸீன்கள் இப்தார் நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் இஃப்தார் விருந்திற்கான தற்காலிக அறைகள் அல்லது கூடாரங்களை ஏற்படுத்துவதை தடை செய்துள்ளத.

“இஃப்தார் விருந்து அல்லது நோன்பை முடித்து கொள்ளுதல் இமாம் மற்றும் முஸீனின் பொறுப்பின் கீழ் இருக்க வேண்டும். உணவை சாப்பிட்ட உடனேயே இடத்தை சுத்தம் செய்ய வேண்டும்” என்று உத்தரவில் மேலும் கூறப்பட்டுள்ளது. அத்துடன்,  மசூதி அதிகாரிகள் இஃப்தார் நோன்புகளுகாக நிதி நன்கொடைகள் கோருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. உது தொடர்பான உத்தரவில், “அரசின் பல்வேறு பகுதிகளில் உள்ள இமாம்கள் மற்றும் முஅஜின்கள் நோன்பை முடிக்க நடத்தப்படும் இப்தார் விருந்துகளுக்கு நிதி நன்கொடை வசூலிக்க வேண்டாம்” என கூறப்பட்டுள்ளது.

மேலும்,  மசூதி வளாகத்திற்குள் கேமராக்கள் மற்றும் புகைப்படம் எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும், ஆன்லைன் உட்பட எந்த ஊடக தளத்திலும் பிரார்த்தனைகளை ஒளிபரப்பவும் அனுமதி இல்லை என கூறியுள்ளது.