சாத்தூர்: சாத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 21 மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தூர் சடையம்பட்டி தனியார் கலை அறிவியல் கல்லூரிக்கு சொந்தமான பேருந்து, இன்று கல்லூரியில் படிக்கும் மாணவிகளை ஏற்றிக் கொண்டு கல்லூரிக்கு வந்துகொண்டிருந்தது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் மற்றும் கரிசல்குளம் பகுதியை சேர்ந்த சுமார் 60 மாணவிகள் கல்லூரி பஸ்சில் இன்று வந்தனர். அந்த பஸ் சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டி பகுதியில் வந்தபோது திடீரென பேருந்தின் மெயின் ஆக்சில் கட்டானது. இதனால் பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தின் மீது மோதியது.
இந்த விபத்தில் அந்த பஸ்சில் பயணம் செய்த மாணவிகள் 21 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சாத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்த மாணவிகளை மீட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவர்களில் படுகாயமடைந்த 6 மாணவிகள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பேருந்தை திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த கணபதி (வயது 63) என்பவர் ஓட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]