மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலைக்கு காரணம்,  போலீசாரில் தாக்குதல்தான் என்று மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ். இவரது மகன் பென்னிக்ஸ். இவர்கள் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர். கரோனா ஊரடங்கின் போது ஊரடங்கு கட்டுப்பாட்டு நேரம் தாண்டி கடையை திறந்து வைத்திருந்ததாக தந்தை, மகனை போலீஸார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு வைத்து போலீஸார் கடுமையாக தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து இறந்தனர்.

இது தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உட்பட 9 பேரை சிபிஐ போலீஸார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையை விரைவில் முடிக்கக் கோரி ஜெயராஜ் மனைவி ஜெயராணி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணையை 6 மாதத்தில் முடிக்க உத்தரவிட்டது. ஆனால் ஆண்டுகள் கடந்தும் விசாரணை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில், ஏற்கனவே பல குற்றப்த்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து சாட்சிகள் விசாரணையும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையில், உயிரிழந்த  சாத்தான்குளம்  ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் சாவுக்கு காவலர்கள் தாக்கியதுதான் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவரான செல்வமுருகன் என்பவர் கொடுத்துள்ள  அறிக்கையில், போலீசார் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களே, அவர்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.