சென்னை:  குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகள் முடிவுடைந்து,. தேர்வு முடிவுக்காக தேர்வர்கள் காத்திருக்கும் நிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்களான  7,381ஐ, 10,117ஆக அதிகரித்து, டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வமாக  அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தமிழக அரசுத்துறைகளில் உள்ள நான்காம் நிலை பணியிடங்கள் மற்றும் வி.ஏ.ஓ பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வரைவாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வு 7301 பணியிடங்களுக்கு நடைபெற்றது. இதுவரை இல்லாத வகையில் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் தேர்வில் பங்கேற்றனர்.  ஆனால், இதுவரை தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இது தேர்வர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்த மாதத்திற்குள் (மார்ச்) தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. இந்த நிலையில்,  நடந்து முடிந்த குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு தேர்வு அறிவிக்கப்பட்டபோது 7,381ஆக இருந்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப்4 தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது திடீரென காலி பணியிடம் அதிகரிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்வு முடிவுகளை வெளியிட மேலும் தாமதப்படுத்தும் நோக்கமாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

டிரெண்டிங் எதிரொலி: குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாவது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…