சென்னை: அதிமுகவின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டு வரும்  நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, தானே அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் உலா வருவதுடன்,  அ.தி.மு.க. தொண்டர்களுக்கு,  காலத்திற்காக காத்திருப்பவன் ஏமாளி; காலத்தை கைப்பற்றுபவனே புத்திசாலி என பரபரப்பு கடிதம் எழுதி உள்ளார். இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ.மறைவுக்கு பிறகு, அதிமுகவில் இருந்து மன்னார்குடி மாஃபியாக்கள் வெளியேற்றப்பட்டனர். சசிகலா உள்பட சிலர் சிறைக்கு சென்றனர். சிறை தண்டனை முடிந்து வெளியே வந்ததும், அதிமுகவை கைப்பற்றும் நோக்கில் மீண்டும் ஆட்டத்தை தொடங்கி உள்ளார் சசிகலா. ஆனால், அதற்கு தற்போதைய தலைமை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

தற்போது அதிமுக பொன்விழா ஆண்டு தொடங்கி உள்ளதால், ஜெ, எம்ஜிஆர் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய சசிகலா, அதிமுக கொடியை ஏற்றியும், அதிமுக கொடி போட்ட காருடன் உலா வருகிறார். அதிமுக இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், அவரது கோரிக்கையை எடப்பாடி, ஓபிஎஸ் தலைமை நிராகரித்து வருகிறது.

இந்த நிலையில், பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா, அ.தி.மு.க.வினருக்கு,   திடீரென  கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இன்றைய தொடக்கம் ஒரு இனிய தொடக்கம் ஆகட்டும். நாளைய நாள் நமக்காகட்டும். நம் நற்பணிகளால் தமிழ்ச் சமூகம் மீள் உயிர் பெறட்டும். இதற்கான வெற்றி இலக்கு நோக்கி நம் கழகத்தை இயக்குவோம்.

அண்ணா கண்ட வழியில்… புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். கொண்ட கொள்கைகளை பின்பற்றி ஆளுமையால், ஆட்சி சிறப்பால் மக்கள் மனம் வென்ற நம் புரட்சித்தலைவி அம்மா பயணித்த நீண்ட பாதையை நெஞ்சில் கொண்டு கழகம் காப்போம்.

கரம் கோர்ப்போம். பகை வெல்வோம்.

ஒற்றுமைப் பூக்களை ஒன்றாய் குவிப்போம். தமிழ் சமூகத்தின் ஏற்றம் ஒன்றே நம் எண்ணமென்று மக்களுக்கு உரைப்போம். புறப்படுங்கள் புலியின் குகையை பூனைகளுக்கு பரிசளிக்கலாமா? பொறுத்தல் தகுமா?

மக்கள் தந்த மாபெரும் வெற்றியால் அ.தி.மு.க. நாடு ஆண்டதையும் அது ஆற்றிய நற்பணிகளையும் சரித்திரம் சொல்லும். நமக்கான புரிதலில் நிலவிய சிக்கலால் எதிரிக்கு இடம் கொடுத்து விட்டோமே. சிந்தியுங்கள்.

எத்தனை எத்தனை இன்னல்களைக் கடந்த புரட்சித் தலைவி அம்மா சென்ற வழியில் தடையின்றி செல்ல உறுதி கொள்வோம். நீங்கள் நினைப்பது புரிகிறது. தொண்டர்களே உங்கள் தூய நெஞ்சம் புரிகிறது. கழகம் காக்கப்படும். மக்கள் ஒற்றுமை உயிர் பெறும்.

காலத்திற்காய்க் காத்திருப்பவன் ஏமாளி. காலத்தை கைப்பற்றுபவன் புத்திசாலி.

அம்மாவின் பிள்ளைகளான நாம் புத்திசாலிகளன்றோ? கரம் கோர்ப்போம். அம்பாய் பயணிப்போம். இலக்குகளை தொடுவோம். அயராது உழைக்க மனம் கொள்வோம்.

எதிர்காலத்தை நம் கழகத்தின் கையில் கொண்டு வர சூளுரைப்போம். அஞ்சாது உறுதி ஏற்போம். மக்களுக்காய் நாம் இருப்போம். நமக்காக மக்கள் இருப்பார்கள்.

கழகத்தின் பாதையில் புரட்சித்தலைவர் காணாத சோதனையா? புரட்சித் தலைவி அம்மா காணாத இடர்பாடா? அத்தனை தடைகளையும் உடைத்து அவர்கள் கழகம் காத்த காலத்தை நாம் அறிவோம்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். இது நாம் அறிந்தது தானே. வெல்வோம் சகோதரர்களே, நான் இருக்கிறேன் என்பதை விட நாம் இருக்கிறோம். ஆதிக்கம் ஒருநாள் மக்களிடம் மண்டியிடும். அம்மா பாதையில் மக்கள் மனம் வெல்வோம்.

ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம். தலைவர் புகழ் ஓங்கட்டும். தலைவி புகழ் நிலைக்கட்டும். பொன்விழா பிறக்கும் இந்த நாள் கழகத்தின் வரலாற்றில் புது நாளாகட்டும்.

தலைவரின் எத்தனை எத்தனை திட்டங்களால் சமூகம் எழுச்சி கண்டது?

தலைவியின் எத்தனை எத்தனை செயல்பாடுகள் மக்கள் வாழ்வை மாற்றிக் காட்டின? தலைவர்கள் காட்டிய பாதையில் தொய்வில்லாமல் மக்களுக்காக பயணிப்போம். சங்கமிப்போம், சாதிப்போம்.

கழகம் நஞ்சாவதை ஒரு நொடியும் பொறுக்காது. தொடர்வோம் வெற்றிப் பயணத்தை தொண்டர்களின் துணையோடும் மக்களின் பேராதரவோடும். மீண்டும் அம்மாவின் ஆட்சியை அமைப்போம். புரட்சித் தலைவர் நாமம் வாழ்க… புரட்சித் தலைவி அம்மா நாமம் வாழ்க…

நன்றி வணக்கம்.

இவ்வாறு கூறி உள்ளார்.