சென்னை:

வரும் 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்க சசிகலா திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் முதல்வர் பன்னீர்செல்வத்தின் தொடர் மவுனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவை தொடர்ந்து ஒ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சசிகலா முதல்வர் பதவியையும் ஏற்க வேண்டும் பல அமைச்சர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கான மறைமுக வேலைகளில் சசிகலா குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்து, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுத்ததன் மூலம் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளது.

மேலும், மத்திய அரசின் ஆதரவும் பன்னீர்செல்வத்துக்கு தான் என்று பாஜ மூத்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்து வருகிறார். குறிப்பாக ஜெயலலிதா எதிர்த்த மத்திய அரசின் திட்டங்களுக்கு கூட பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்து வருகிறார். மத்திய அரசின் பட்ஜெட்டுக்கு வரவேற்பு தெரிவித்தார்.

பன்னீர்செல்வத்தில் இந்த நடவடிக்கை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை சென்னை, ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. சசிகலா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 136 எம்எல்ஏக்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று அனைத்து எம்எல்ஏக்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக எம்எல்ஏ.க்கள் சிலர் கூறுகையில், ‘‘அவசர கூட்டம் ஏன் கூட்டப்படுகிறது என்ற தகவல் கட்சி தலைமை சார்பில் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. தொகுதி பிரச்னை குறித்து பேச வேண்டும் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுது. இந்த கூட்டத்தில், சட்டமன்ற கட்சி தலைவராக தற்போதுள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதிலாக சசிகலா தேர்வு செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதை ஏற்போம்” என்றனர்.

அதிமுக மூத்த அமைச்சர் ஒருவர் கூறுகையில், “நாளை நடைபெறும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில், அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார். இதைத்தொடர்ந்து நாளை மறுதினம் (6ம் தேதி) சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க அதிக வாய்ப்புள்ளது” என்றார்.

இதற்கிடையில், தமிழக அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சசிகலாவில் நிர்பந்தத்தை தொடர்ந்து ராஜினாமா செய்ததாக தலைமை செயலக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அடுத்ததாக சசிகலா பதவி ஏற்க வசதியாக ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வேண்டும். அந்த ராஜினாமா கடிதத்தை தமிழக கவர்னரிடம் ஓ.பன்னீர்செல்வம் வழங்க வேண்டும்.

ஆனால், பன்னீர்செல்வம் ராஜினாமா செய்வதாக யாரிடமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அவர் ராஜினாமா செய்ய மறுத்து வருவதாகவும், தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் ரகசியமாக ஆலோசனை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கு ஏற்ப திமுக பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்கும் என்று ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோர் பேசியிருப்பது பன்னீர்செல்வத்துக்கு ஆறுதலாக இருந்தாலும், சசிகலா தரப்பு இந்த அறிவிப்பு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக கவர்னர் (பொறுப்) வித்யாசாகர் ராவ், நாளை ஒரு விழாவில் கலந்து கொள்ள கோவை வருகிறார். பின்னர் சென்னை வராமல் அப்படியே 7ம் தேதி மும்பை செல்ல கவர்னர் திட்டமிட்டுள்ளார். அவசர அரசியல் சூழ்நிலை கருத்தில் கொண்டு, கவர்னர் உடனடியாக சென்னை வரவைக்கும் திட்டமும் சசிகலா தரப்பு வசம் உள்ளதாம்.

எனினும் பன்னீர்செல்வம் மத்திய அரசை நம்பிக் கொண்டு இருக்கிறார். அதனால் அவர் ராஜினாமா செய்ய மறுத்தால் அதிமுக எம்எல்ஏ.க்கள் ஆதரவை வாபஸ் வாங்க முடியாத நிலை உள்ளது. வாபஸ் வாங்கி ஆட்கி கவிழ்ந்தால், அடுத்த ஆட்சி அமைக்கும் பொறுப்பு திமுக.வுக்கு சென்றுவிடும் என்பதால் பன்னீர்செல்வத்தை மிக கவனத்துடன் கையாள சசிகலா குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.