ஈரோடு,

திமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  சசிகலா தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அதிரடியாக  குற்றம்சாட்டியுள்ளார்.

ஈரோடு வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது,

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு முதல்வர் என்ற காரணத்திற்காக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் மதிக்கப்பட வேண்டியவர்.

எதிர்கட்சித்தலைவரான மு.க.ஸ்டாலின் கூட முன்னே சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காருக்கு வழிவிட்டு முதல்வருக்கு உரிய மரியாதையை செலுத்தி இருக்கிறார்.

ஆனால், சசிகலா தமிழக முதல்வர் பன்னீர்செல்வத்தை மதிக்காமல் தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார்.

அண்மையில் நடந்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தனக்கு இணையாக மேடையில் அமர வைக்காமல் கும்பலோடு கும்பலாக அமர வைத்து பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தியுள்ளார்.

இது தமிழக மக்களையே அவமானப்படுத்தியதற்கு சமமானது.

ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு போராட்டம் என பல்வேறு விஷயங்களில் சிறப்பாக பணியாற்றி யுள்ளார். ஜல்லிக்கட்டுக்காக உறுதியாக போராடிய மாணவர்களை மனதார பாராட்டுகிறேன்.

மாணவர்களின் போராட்டத்தில் போலீஸார் வன்முறையை கடைபிடித்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.

குறிப்பாக சென்னையில் காவல் ஆணையர் ஜார்ஜ் நடந்து கொண்ட விதம் அராஜகமானது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் மீது தடியடி நடத்தி, வன்முறையில் ஈடுபட்ட காவல்துறையினர் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த அறிக்கையை 2 மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

சென்னை குடிநீர் பிரச்னையை தீர்க்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து தண்ணீர் பெற்று தர எடுத்த நடவடிக்கையை போல கேரள முதல்வரையும் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்டுவதை தடுத்து நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிர் காலம் இல்லை என பிரதமர் மோடி சொல்கிறார். ஆனால், குஜராத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் 80 சதவீத இடங்களில் பாஜக தோல்வியை அடைந்தது.

இதேபோல உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பாஜக படுதோல்வியடையும்.

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி, காங்கிரஸ் கட்சி கூட்டணி பெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். பாஜக காணாமல் போய் விடும்.

பிராணிகள் பாதுகாப்புக்காக தொடங்கப்படும் அமைப்பு என்ற காரணத்திற்காகத்தான் பீட்டாவுக்கு காங்கிரஸ் அனுமதியளித்தது. ஆனால், பீட்டா தமிழர்களின் கலாச்சாரமான ஜல்லிக்கட்டை எதிர்த்து வழக்கு தொடர்ந்ததால் அப்போதே பீட்டாவை தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்த தொடங்கிவிட்டது.

காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருக்கும் வரையிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் தடையின்றி நடந்தது.  ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தப்பிறகே ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்காக அதிமுக எம்பி.,க்களை சந்திக்க மறுத்ததன் மூலம் பிரதமர் மோடி தமிழக நலனில் எப்போதும் அக்கறை இல்லாதவர் என்பதை மீண்டும் நிருபித்துள்ளார்.

வறட்சியால் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து இறந்து விட்டனர். அவர்களின் சாவை கொச்சைப்படுத்தாமல் இறந்து போன விவசாயிகளின் குடும்பத்திற்கு தமிழக அரசு காலந்தாழ்த்தாமல் நஷ்டஈடு வழங்க வேண்டும்.

பன்னாட்டு குளிர்பானங்களான கோக், பெப்ஸி போன்றவை உடல்நலத்திற்கு தீங்கு விளைவிப்பவை என்பதால் அதன் விற்பனையை தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.