சென்னை:

ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவி ஏற்றார். செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் இவர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், பொதுச் செயலாளரை தொண்டர்கள் வாக்களித்து தேர்தல் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்பது அதிமுகவின் விதிகளில் ஒன்றாகும்.

இதனால் அவர் பதவி ஏற்றது செல்லாது என்று பலதரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம் இந்த விவகாரத்தை கையில் எடுத்து தேர்தல் கமிஷன் வரை கொண்டு சென்றார். இதன் பின்னர் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும் அவர் பொதுச் செயலாளர் பதவியில் நீடித்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது இரட்டை இலை முடக்கப்பட்டுள்ளது. அதிமுக பெயரை சசிகலா அணியும், பன்னீர்செல்வம் அணியும் பயன்படுத்த தேர்தல் கமிஷன் தடைவிதித்துள்ளது. சசிகலா அணியை அதிமுக அம்மா அணி என்றும், ஓபிஎஸ் அணியை அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்தபடியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தினர். இதனால் அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தபோது பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமைச்சர்கள், டெல்லி மேலிட பிரதிநிதி ஆகியோர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அடுத்த படியாக இரட்டை இலையை மீட்க ரூ. 60 கோடி பேரம் பேசி, முன் பணமாக ரூ. 1.30 கோடி கொடுத்ததாக தினகரன் மீது டெல்லியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில் தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தினகரன் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படி ஜெயலலிதா இல்லாத அதிமுக அடுக்கடுக்கான சோதனைகளை சந்தித்து வருகிறது. அதோடு மக்கள் மத்தியில் அவப்பெயரையும் சம்பாதித்துள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.

தற்போது சசிகலா, தினகரனுக்கு எதிராக அமைச்சர்கள் சிலரே போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் சசிகலா பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகவுள்ளா தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவை தொடர்ந்து தினகரனும் கட்சி பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என்று கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.