மும்பை: ராகுல் காந்தியின் புதிய அவதாரம் தொடர்ந்தால் 2024-ல் அரசியல் மாற்றம் ஏற்படும் என மகாராஷ்டிரா மாநில உத்தவ் தாக்கரே சிவசேனா ஆதரவாளர் சஞ்சய் ராவத் எம்.பி. கணித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கை, அதிகரித்து வரும், பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை, மதவேற்றுமைகள், ஜிஎஸ்டி மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல் உள்பட பல்வேறு பிரச்சனைகளை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில், எழுப்பி, வயநாடு எம்.பி.யுமான, ராகுல்காந்தி, குமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வருகிறார். அவரது யாத்திரைக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. அவர் நடைபயணம் மேற்கொள்ளும் இடங்களில் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ராகுலுக்கு கிடைத்து வரும் வரவேற்பு குறித்து, கூறிய உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் எம்.பி.யான சஞ்சய் ராவத், இது ராகுலின் புதிய அவதாரம் என்று கூறியதுடன், இது தொடர்ந்தால், 2024ம் ஆண்டு புதிய மாற்றம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.
ராகுலின் யாத்திரையானது டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி டெல்லி வந்தது. இடையில் கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்காக ஒரு வாரம் விடுமுறை விடப்பட்டு உள்ளது. , ஜனவரி 3 ஆம் தேதி உத்தரபிரதேசத்தில் மீண்டும் தொடங்கி உள்ளது.
இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வமான பத்திரிகையான சாம்னாவில், எழுதியுள்ள சஞ்சய் ராவத், பாஜகவின் ராமர் கோவில் பிரச்சினை முடிந்துவிட்டது. அதை சொல்லி இனிமேல் ஓட்டு வாங்க முடியாது. எனவே ‘லவ் ஜிகாத்’ என்ற புதிய பிரச்சினை கிளப்பப்பட்டு உள்ளது. தேர்தலில் வெற்றி பெறவும், இந்துக்கள் இடையே பயத்தை ஏற்படுத்தவும் ‘லவ் ஜிகாத்’ ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறதா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மக்களிடையே வெறுப்பு மற்றும் பிரிவினையை விதைக்க கூடாது. இந்துக்களை விழிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது தான் பா.ஜனதாவின் கொள்கை. அதற்காக சமூகத்தில் வெறுப்பையும், பிரிவினையையும் உருவாக்க வேண்டும் என்ற அர்த்தமில்லை. இந்து, முஸ்லிம் இடையே பிளவை தூண்டுவது மற்றொரு பிரிவினைக்கு வழிவகுக்கும்.
2023-ல் நாடு அச்சம் இல்லாததாக மாறும் என நம்புகிறோம். அதிகாரத்தின் அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது. எந்த மதம், சமூகத்தை சேர்ந்த பெண்களும் வன்முறைக்கு ஆளாக கூடாது. பிரதமர் மோடி குறுகிய மனப்பான்மையை விட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
2022-ம் ஆண்டு ராகுல் காந்தியின் தலைமைக்கு புதிய ஒளியையும், அவதாரத்தையும் கொடுத்தது. 2023-லும் தொடர்ந்தால் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாம் அரசியல் மாற்றத்தை காண முடியும். ராகுல் காந்தியின் யாத்திரை வெற்றி பெறும் எனவும், அது 2024-ல் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், அதன் இலக்கை அடையும் என நம்புகிறோம். 2024 இல் ராகுல் காந்தி எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக வருவார் என்றும் உறுதிப்படுத்தினார்.
ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர், அவர்கள் எதிர்க்கட்சிகளின் உரிமைகளையும் அங்கீகரிக்க விரும்பவில்லை. இந்துக்களை விழிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது தான் பா.ஜனதாவின் கொள்கை. அதற்காக சமூகத்தில் வெறுப்பையும், பிரிவினையையும் உருவாக்க வேண்டும் என்ற அர்த்தமில்லை.
இவ்வாறு அதில் எழுதி உள்ளார்.