லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று பாத யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல்காந்திக்கு,  அயோத்தி ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஒருவார விடுமுறைக்கு பின்பு ராகுலின் பாதயாத்திரை இன்று டெல்லியில் மீண்டும் தொடங்கியது. இந்த யாத்திரையானது இன்று மாலை  உத்தரப்பிரதேசத்தின் காஜியாபாத்தில் உள்ள பாக்பத்தில் நுழைகிறது. தொடர்ந்து இன்று இரவு மாவிகலா கிராமத்தில் முடிவடைகிறது. அங்கு ராகுல் உள்பட யாத்திரையில் வருபவர்கள் தங்கி, நாளை காலை மீண்டும் பயணத்தை தொடங்குகின்றனர்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை உத்தரப் பிரதேசத்தில் நுழைவதற்கு முன்னதாக, அயோத்தியின் ராம ஜென்மபூமி கோவிலின் தலைமை அர்ச்சகர்  ஆச்சார்யா மஹந்த் சத்யேந்திர தாஸ் , ராகுல்காந்தியின் யாத்திரை வெற்றிபெற கடிதம் எழுதி வாழ்த்தி உள்ளார்.

அவர்  எழுதியுள்ள கடிதத்தில்,  “நாட்டை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் முன்னாள் காங்கிரஸ் தலைவருக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும்,  “நீங்கள் போராடும் பணி வெற்றியடைய வேண்டும் என்று நம்புகிறேன், பிரார்த்தனை செய்கிறேன். உங்கள் நீண்ட ஆயுளுக்கு நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்” என்றும்,  மக்கள் நலனுக்காகவும், மக்களின் மகிழ்ச்சிக்காகவும் ‘சர்வஜன் ஹிதாய் சர்வஜன் சுகாய்’ என்ற உன்னத நோக்கத்திற்காக நீங்கள் பாடுபடுகிறீர்கள். ராமரின் ஆசீர்வாதம் எப்போதும் உங்கள் மீது இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” பிரார்த்தனை செய்கிறேன், உங்கள் நீண்ட ஆயுளுக்காக நான் உங்களை ஆசீர்வதிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராகுலின் யாத்திரையின்போது,  அனைத்து மத வழிப்பாட்டு தலங்களுக்கும் சென்று பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார். ராகுலின் இந்த நடவடிக்கைக்கு ஒரு சாரார் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ராமர்கோவில் தலைமை அர்ச்சகர் ராகுலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ராகுலின் இன்றைய யாத்திரையானது, இன்று பிற்பகல் உத்தர பிரதேசத்தின் காசியாபாத் வழியாக இன்று மதியம் மற்றும் பாக்பத்தில் உள்ள மாவிகலா கிராமத்தில் இரவு தங்கி, மீண்டும் நாளை( ஜனவரி 4 ஆம் தேதி)  ஷாம்லி வழியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனவரி 5 ஆம் தேதி மாலை பானிபட்டில் உள்ள சனௌலி வழியாக ஹரியானாவிற்குள் நுழைவதற்கு முன், மூன்று மாவட்டங்களில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபயணம் மேற்கொள்ளும்.

உ.பி.யில் யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுலுக்கு சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்பட பல கட்சிகள் ஆதரவும், வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளன. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தனது யாத்திரையில் இணைய வேண்டும் என்று ராகுல் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அவர்கள்,  வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், ராகுலிடம் இருந்து  விலகி இருக்க முடிவு செய்துள்ளன.

இதைத்தொடர்ந்து, ராகுலின் யாத்திரை,  பஞ்சாபிலிருந்து இமாச்சலப் பிரதேசம் வழியாக ஒரு நாள் பயணித்த யாத்திரை பின்னர் ஜம்மு காஷ்மீருக்குள் நுழையும்.

பாரத் ஜோடோ யாத்திரை கடந்த ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி இதுவரை 3,000 கி.மீட்டருக்கு மேல் பயணித்துள்ளது. ஜனவரி 30ஆம் தேதி ஸ்ரீநகரில் ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றிவைப்புடன் நிறைவு பெறுகிறது.