மும்பை:

காராஷ்டிரா மாநிலத்தில், பாஜக சிவசேனா கூட்டணிக்குள் அதிகாரப்பகிர்வு காரணமாக மோதல் நீடித்து வரும் நிலையில்,  சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் திடீரென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். இது மகாராஷ்டிரா மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்தியாளர்களிடம் பேசிய ரவுத், சிவசேனை ஆட்சியமைக்க முடிவெடுத்தால் அதற்கு தேவையான ஆதரவை எளிதாகப் பெற முடியும் என்றும் பாஜகவுக்கு முறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.

சரத் பவார் – சஞ்சய் ரவுத்

288 சட்டப்பேரவை தொகுதிகளைக்கொண்ட மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில், பாஜக சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவைப்படும் நிலையில், பாஜக 105 இடங்களையும், சிவசேனா 56 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. இதையடுத்து கூட்டணி ஆட்சி பதவி ஏற்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், சிவசேனாவின் 50 சதவிகிதம் அதிகாரப்பகிர்வு மற்றும் முதல்வர் பதவி என்ற கெடுபிடி காரணமாக அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.

இந்த நிலையில்,  மகாராஷ்டிர மாநில சிவசேனா எம்எல்ஏக்கள் கூட்டம் மும்பையில்  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிவசேனா சட்டப்பேரவை கட்சித் தலைவராக ஏக்னாத் ஷிண்டே தேர்வு செய்யப்பட்டார். ஆதித்ய தாக்கரே துணை முதல்வராக பதவி ஏற்க ஏதுவாக அவர் சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. அதையடத்து,  மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட சிவசேனா தலைவர்கள்  நேற்று சந்தித்து பேசினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதித்ய தாக்கரே ஆட்சி அமைப்பதில் 50;50 என்ற கருத்தில் சிவசேனா உறுதியாக இருப்பதாகவும், கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேயின் முடிவே இறுதியானது என்றும் கூறினார்.

இந்த பரபரப்பான சூழலில் சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் திடீரென தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவுத் ‘மகாராஷ்டிர அரசியல் நிலவரம் குறித்தும் இருவரும் விவாதித்தோம்’’ எனக் கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரவுத்,  மகாராஷ்டிரத்தில் சிவசேனை ஆட்சியமைக்க முடிவெடுத்தால் அதற்கு தேவையான ஆதரவை எளிதாகப் பெற முடியும். இங்கு சம பங்கு ஆட்சியமைக்க மட்டும் தான் சிவ சேனை, பாஜக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர். சிவசேனை கட்சியிலிருந்து தான் மகாராஷ்டிர முதல்வர் தேர்வு செய்யப்பட வேண்டும் எனவும் மக்கள் விரும்புகின்றனர் என்று தெரிவித்தார்.

ரவுத்தின் கருத்து  காரணமாக மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இதற்கிடையில், 44  இடங்களை கைப்பற்றி உள்ள காங்கிரஸ், 54 இடங்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சியின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கலாமா என்று சிந்தித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.