சென்னை: மணல் குவாரி முறைகேடு தொடர்பாக மணல் காண்டிராக்டரான திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தி வருகிறது.

மணல் குவாரி முறைகேடு தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் அமலாக்கத்துறை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தியது. அப்போது, மணல் காண்டிராக்டர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் மணல் குவாரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் பிரபல மணல் காண்டிராக்டரான  திண்டுக்கல் தொழிலதிபர் ரத்தினம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.  திண்டுக்கல் தொழில் அதிபர் ரத்தினம் மற்றும் அவருடைய மைத்துனர் கோவிந்தன் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் செப்டம்பர் 12ந்தேதி (12.09.23) காலை 9 மணி முதல் 10க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுனர்.    ரத்தினம் மைத்துனர் கோவிந்தன் வசிக்கும் ஹனிபா நகரில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை இரவு 11மணி அளவில்  நிறைவு செய்தனர்.  திண்டுக்கல் ஜி டி என் சாலையில் உள்ள ரத்தினம் வீடு மற்றும் அலுவலகங்களில் இரவு முழுவதும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வந்தது. சுமார்  31 மணி நேரம் அமலாக்கத்துறை சோதனை நடத்தி பல முக்கிய  ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, கனிமவள அதிகாரிகள், 10 மாவட்ட ஆட்சியர்கள் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதையடுத்து கனிவளத்துறை அதிகாரி மட்டும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆட்சியர்களை விசாரணைக்கு அழைத்துள்ளதை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்கு போட்டுள்ளது.

இந்த நிலையில், திண்டுக்கல் உள்ள தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை மீண்டும்  சோதனை நடத்தி வருகிறது. ரத்தினம் வீடு, அலுவலகங்களில் 2-வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.