மதுரை:  வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால்,  5 மாவட்ட ஆற்றங்கரையோரம் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழையாலும் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 6000 கனஅடி வெள்ளநீர் வெளியேற்றப்படுவதாலும் மதுரையில் வைகை ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்கள்  பாதுகாப்பாக இருக்கும்படி எஸ்.எம்.எஸ்., மூலம் பேரிடர் மேலாண் துறை எச்சரித்துள்ளது.

 மதுரை  கோரிப்பாளையம் – ஆரப்பாளையம் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடியின் காரணமாக சாலைக்கு தண்ணீர் வருவதால் செடிகளை அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கியது முதல் மாநிலம் முழுவதும் மழை பெய்து வருகிறது. தற்போது பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால், தமிழ்நாட்டின் உள்ள அணைகள், குளம், குட்டைகளில் நீர் அதிகரித்து வருகிறது.  மதுரை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில்  பெய்த மழை காரணமாக, அங்குள்ள வைகை அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது  அணையின் நீர்மட்டம் 67 அடியை தாண்டியது.  அணையின் மொத்த கொள் அளவு 71 அடி என்பதாலும், நீர்வரத்து 2,990 கனஅடியாக உள்ளதாலும், அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  சுமார் 6,000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதனால்  மதுரை மாநகரில் வைகை  ஆற்றின் இரு கரைகளையும் ஆரத் தழுவியபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.  இதனால் மதுரை மாநகரில் வைகை ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, கால்நடைகளைக் குளிப்பாட்டவோ, துணிகளை துவைக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

வைகை அணையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக, திறந்து விடப்பட்ட தண்ணீர், மதுரை சிம்மக்கல் ஏ.வி.மேம்பாலம் பகுதியில் இரு கரைகளைத் தொட்டு புது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மதுரை மாநகர மக்களும் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.