சென்னை: மணல் குவாரி விவகாரத்தில். அமலாக்கத்துறை கலெக்டர்களுக்கு அனுப்பிய சம்மன் தொடர்பான மேல்முறையீடு வழக்கில்,.  தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், மணல் ஒப்பந்த குவாரிகளில் வந்த வருமானத்தை சட்ட விரோதமாகப் பரிமாற்றம் செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.  இந்த குற்றச்சாட்டு தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த ஆண்டு அதிரடி சோதனைகளை மேற்கொண்டனர்.  அரசு அதிகாரிகள், மணல் குவாரிகள், மணல் ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள், அரசு அலுவலகம் என  பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றியது.

இந்த சோதனையைத் தொடா்ந்து, 10 மாவட்ட கலெக்டர்கள், நீா்வளத்துறை முதன்மைப் பொறியாளா் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறைப் பொறியாளா் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராக கூறி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, கலெக்டர்கள் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு அதிகாரிம் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.  அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு எதிராக தமிழக அரசின் பொதுப் பணித்துறைச் செயலா், நீா்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலா், திருச்சி, தஞ்சாவூா், கரூா், அரியலூா் மற்றும் வேலூா் என 5 மாவட்ட கலெக்டர்கள் சாா்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து,   அமலாக்கத்துறை சம்மனுக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இதனை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீடு தொடர்பாக இன்று இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்ல. விசாரணைக்காக மட்டுமே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எப்படி ரிட் மனு தாக்கல் செய்ய முடியும்? என கேள்வி எழுப்பியதுடன், அமலாக்கத்துறை விசாரணைக்கு மாவட்ட ஆட்சியர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது அவர்களது கடமை என்று கூறியதுடன், தமிழ்நாடு அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.   இதைத்தொடர்ந்து வழக்கின் விசாரணையை மார்ச் 4-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மணல் குவாரி முறைகேடு: தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் – அரசு வழக்கு…