சென்னை: அமைச்சர் உதயநிதி சனாதனத்தை ஒழிப்போம் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அவர்மீது மும்பை காவல்நிலையத்தில் புதிய எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட உரையாற்றிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் , சனாதன தர்மத்தை “மலேரியா” மற்றும் “டெங்கு” வுடன் ஒப்பிட்டு பேசினார். “சனாதனத்தை எதிர்ப்பதை விட, அதை ஒழிக்க வேண்டும். சனாதனம் என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து வந்தது. இது சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கு எதிரானது” என்று உதயநிதி கூறினார். இது தேசிய அளவில் பெரும் அரசியல் சர்ச்சைக்கு வழிவகுத்த பிறகும், உதயநிதி தனது வார்த்தைகளில் தான் நிற்பதாகக் கூறியதுடன், தனது கருத்துக்கள் இனப்படுகொலைக்கான அழைப்பாக தவறாக சித்தரிக்கப்படுவதாகவும் கூறினார்.

சனாதனம் என்பது இந்து மத்தின் கோட்பாடாக கருதப்படுகிறது. சனாதனம் தர்மப்படியே இந்துக்கள் செயல்பட்டு வருகின்றனர். இதனால்,  சந்தானம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  உதயநிதிக்கு  எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பீகார், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களி லும் வழக்குகள் தொடரப்பட்டன.  மேலும், திமுக இடம்பெற்றுள்ள  ‘இந்தியா” கூட்டணி தலைவர்களான மமதா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால்  மட்டுமின்றி காங்கிரஸ் தலைவர்களும், உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், உதயநிதிமீது, கடந்த வாரம், உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் மத உணர்வுகளை சீர்குலைத்ததாக  மற்றொரு எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. உதயநிதியின் கருத்துகளை ஆதரித்ததற்காக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே பெயரும் எஃப்ஐஆர்ல் சேர்க்கப்பட்டிருந்தது. இருவர் மீதும் 295A மற்றும் 153A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பீகாரில் உள்ள முசாபர்பூர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் உதயநிதிக்கு எதிராக மற்றொரு புகார் அளிக்கப்பட்டது . இந்த நிலையில், உதயநிதியின் சனாதனம் பேச்சுக்கு எதிர்ப்பு எழுந்து வரும் நிலையில் அவர் மீது மும்பையில் புதிய எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து,  மும்பை தானே பகுதியில் உள்ள  மீரா ரோடு காவல் நிலையத்தில் புதிய எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவிப்பதற்காகவும் (ஐபிசி 153 ஏ) மற்றும் மத உணர்வுகளை சீற்றம் செய்ததற்காகவும் (ஐபிசி 295 ஏ) எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆளும் கட்சித் தலைவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யக் கோரி, தமிழக பாஜக தலைவர்கள் குழு செவ்வாய்க்கிழமை மாநில காவல்துறையிடம் மனு ஒன்றை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.