சென்னை: சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் விசாரணைக்கு ஆஜராக கர்நாடக நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே பீகார் நீதிமன்றம் சம்மன் அனுப்பிய நிலையில், தற்போது கர்நாடக நீதிமன்றமும் சம்மன் அனுப்பி உள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சனாதன ஒழிப்பு மாநாடு என்ற பெயரில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது, சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டு அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக உதயநிதி மீது தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும்,   அமைச்சர் உதயநிதியின் பேச்சு மத உணர்வுகளை புண்படுத்துவதாக உத்தர பிரதேசத்தின் ராம்பூரில் உள்ள சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் ஹர்ஷ்குப்தா, ராம்சிங் லோதி ஆகியோர் புகார் கொடுத்தனர். அதுபோல பீகார், கர்நாடகா உள்பட பல மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,   உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பெங்களூருவை சேர்ந்த பரமேஷ் பெங்களூருவில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக மார்ச் 4-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது.

சனாதனம் சர்ச்சை: உதயநிதி நேரில் ஆஜராக பாட்னா நீதிமன்றம் சம்மன்!