தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பாக சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “டெங்கு, மலேரியா, கொரோனா போன்று சாதனத்தையும் ஒழிக்க வேண்டும்” என்று பேசினார்.

இவரது இந்த பேச்சுக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் வீனீத் ஜிண்டால் டெல்லி போலீசில் அளித்துள்ள புகாரில், “இந்து மதத்தை கொசு, டெங்கு, கொரோனா, மலேரியா ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, அவற்றை ஒழிப்பது போல ஒழிக்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார்.

ஒரு இந்து என்ற வகையில் அவரது பேச்சு எனது உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சு சனாதன தர்மத்துக்கு எதிராக மக்களை தூண்டக்கூடியதாகவும், இழிவுபடுத்தக்கூடியதாகவும் உள்ளது.”

இந்த பேச்சு சட்டவிரோதமானது என்றும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார்.

முன்னதாக நேற்று சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சமூக நீதி மற்றும் சமத்துவத்துக்கு எதிரான சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிக்க வேண்டும்.

சனாதன எதிர்ப்பு மாநாடு என்று இல்லாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று பொருத்தமாக பெயர்வைத்துள்ள ஏற்பாட்டாளர்களை பாராட்டுகிறேன்” என்று பேசினார்.

மேலும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.சின் பங்கு என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். அந்த புத்தகத்தின் முதல் பக்கத்தில் ஆங்கிலேயரின் காலணியை நாவால் வருடுவது போன்ற படமும் அடுத்த படத்தில் மகாத்மா காந்தியை கொலை செய்வது போன்ற ஒரு படமும் இடம்பெற்றிருந்தது.

மீதமுள்ள பக்கங்கள் அனைத்தும் வெற்றிடமாக இருந்த நிலையில் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் அந்தப் பக்கங்களில் தங்கள் கருத்துகளை பதிவிட்டனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பங்கிற்கு அந்த புத்தகத்தில் மூன்று பூஜ்ஜியங்களை வரைந்து விடுதலைப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்.சின் பங்கு பூஜ்ஜியம் என்பதை குறிக்கும் வகையில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.