ஒரே சிலையைச் சிவனாகவும், விஷ்ணுவாகவும், புத்தராகவும் வழிபடும் கோவில்

Must read

ஒரே சிலையைச் சிவனாகவும், விஷ்ணுவாகவும், புத்தராகவும் வழிபடும் கோவில்
மனிதர்களை மற்ற உயிர்களிடமிருந்து வேறு படுத்திக் காட்டுவது ஆறறிவு. அந்த மனிதர்களிலும் ஞானிகள் மற்றும் மகான்களை வேறுபடுத்திக் காட்டுவது, எந்நேரமும் இறைவனைக் குறித்த அவர்களின் தேடலாகும். இப்படி இறைவனைக் குறித்து தியானத்திலும், தேடல்களிலும் இருப்பவர்கள் மட்டுமே முக்தி நிலையை அடைய முடியும் என்பது ஒரு பொதுவான எண்ணமாகும். ஆனால் கடின பயணத்தை மேற்கொண்டு வந்து வழிபடும் பக்தர்களுக்கு முக்தி அளிக்கும் முக்திநாத் கோவிலைப் பற்றி இங்கு அறிந்து கொள்வோம்.
உயரமான இமய மலைத்தொடர்களைக் கொண்ட நேபாள நாட்டின், மஸ்தங் பகுதியில் 3500 மீட்டர் உயரமான மலைச்சிகரத்தில் அமைந்துள்ளது இந்த முக்திநாத் கோவில். முற்காலத்தில் இந்த முக்திநாத் கோவில் “சாளக்கிராம சேத்திரம்” என அழைக்கப்பட்டது. ஏனெனில் இந்த முக்திநாத் கோவிலுக்குச் சற்று தொலைவில் ஓடும் “கண்டகி ஆற்றில்” இயற்கையாக நிறைந்திருக்கும் சாளக்கிராம கற்கள் கிடக்கின்ற காரணத்தால் தான். இந்த சாளக்கிராம கற்கள் விஷ்ணுவின் அம்சம் கொண்டதாக வைணவர்களால் போற்றப்படுகிறது.”108 வைணவ திவ்ய தேசங்களில்” இது “106” ஆறாவது திவ்ய தேசமாகக் கருதப் படுகிறது. மற்றும் வைணவர்கள் புனிதமாகக் கருதும் ஏழு புண்ணிய வைணவ கோவில்களில் இதுவும் ஒரு முக்கிய கோவிலாகக் கருதப்படுகிறது.
108 வைணவ திவ்ய தேசங்களில் பாரதத்திற்கு வெளியில் இருப்பது இந்த ஒரு கோவில் தான். ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் இந்த முக்திநாத் கோவிலுக்கு வரும் முயற்சியில் ஈடுபட்டு, அது முடியாமல் போனதால் இக்கோவில் இருக்கும் ஊருக்குச் சற்று அருகில் இருந்தவாறே இந்த முக்தி நாதரின் தரிசனம் பெற்று மங்களாசாசனம் பாடி அருளினார் திருமங்கை ஆழ்வார். இக்கோவிலில் இருக்கும் முக்தி நாதரின் சிலை ஒரு மனிதனின் உயரத்தில் இருக்கிறது. மேலும் இந்த சிலையின் பெரும்பாலான பகுதி தூய தங்கத்தால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த கோவிலில் சுற்றுச் சுவரில் 108 பசுமாட்டின் தலை கொண்ட சிலைகளின் வாயிலிருந்து தீர்த்தம் கொட்டுகின்றன. இதில் குளித்து முக்தி நாதரை வழிபட்டால் அவருக்கு முக்தி கிட்டும் என்பது வைணவர்களின் நம்பிக்கை.
சிவனை நாயகனாகக் கொண்டு வழிபடும் சைவர்களும் இந்த முக்திநாத் கோவிலை 51 சக்தி பீடங்களில் ஒன்றாகக் கருதுகின்றனர். இந்த முக்தி நாதரைச் சைவர்கள் பைரவராகக் கருதி வழிபடுகின்றனர். இந்த நேபாளத்தில் தான் மகாஞானி புத்தர் பிறந்தார். அந்த புத்த மதத்தின் உபகடவுளான “அவலோகிதேஸ்வரர்” இந்த முக்தி நாதராக இருப்பதாகவும், பத்மசாம்பவேஸ்வர என்ற புத்த துறவி இங்குத் தியானம் செய்வதாலும் இந்த கோவிலைப் புனித இடமாகக் கருதுகின்றனர் புத்த மதத்தினர்.

More articles

Latest article