சண்டிகர்: ஹரியானாவில் நடந்துமுடிந்த சட்டசபைத் தேர்தலில், ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர்கள் அனைவருமே அம்மாநிலத்தின் மறைந்த பழம்பெரும் அரசியல்வாதி தேவிலாலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹரியானா மாநிலத்தில், ராஜஸ்தான் மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ள கிராமம் சவுதாலா.

அம்மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் தேவிலால் சவுதாலாவின் சொந்த கிராமம் இதுவாகும். இக்கிராமம் சிர்சா மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ஓம் பிரகாஷ் சவுதாலாவின் இளைய மகன் அபய் சவுதலா, ஓம் பிரகாஷின் பேரன் துஷ்யந்த் சவுதாலா, துஷ்யந்தின் தாயார் நைனா சிங் சவுதாலா ஆகியோர் வெவ்வேறு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றுள்ளனர்.

இவர்கள் தவிர, ஓம் பிரகாஷின் சகோதரர் ரஞ்சித் சிங் சவுதாலா மற்றும் அதேக் குடும்பத்தைச் சேர்ந்த அமித் சிஹாக் ஆகியோரும் வென்றுள்ளனர். ஆக, மொத்தம் இவர்கள் அனைவருமே ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள்.

ஹரியானா அரசியலில், ஜாட் இனத்தைச் சேர்ந்த தேவிலாலின் குடும்பத்தை எப்போதும் அசைக்க முடியாது என்பது இதன்மூலம் மீண்டும் தெளிவாகியுள்ளது.