டில்லி

மோடியின் குடும்பப் படம் என உலவி வரும் புகைப்படம் ஏற்கனவே அப்துல் கலாம் குடும்பப்படம் என வெளியான போலிப் புகைப்படம் ஆகும்.

 

சமூக வலை தளங்களில் ஒரு சிறுவனும் ஒரு இளம்பெண்ணும் அமர்ந்திருப்பது போல் புகைப்படம் ஒன்று வெளியானது. அந்த புகைப்படம் பிரதமர் மோடி அவரது சிறுவயதில் அவரது தாயார் ஹீராபென் உடன் எடுத்ததாக விவரம் வெளியானது. அந்த விவரத்தில் இந்தியில், “ஜெய்தேவ், பிரதமர் மோடி தனது சிறுவயதில் தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை உண்மை என நம்பிய பலரும் அதை பகிர தொடங்கினர். ஆனால் பலருக்கு இந்த புகைப்படத்தை ஏற்கனவே பார்த்து போல் நினைவு இருந்தது. இதை ஒட்டி செய்தி ஊடகமான “ஆல்ட் நியுஸ்” ஆராய்ந்தது. அப்போது இதே படம் கடந்த 2016 ஆம் வருடம் மே மாதம் 8 ஆம் தேதி ஒரு பிரபல செய்தி ஊடகத்தில் அப்துல் கலாம் அவர் சிறுவனாக இருந்த போது அவர் தாயார் ஆஷியம்மா வுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என குறிப்பிடப்பட்டது கண்டறியப்பட்டது.

 

மேலும் ஆல்ட் நியூஸ் ஆராய்ந்ததில் அந்த புகைப்படம் அப்துல் கலாமின் குடும்ப படம் என வெளியான ஒரு படத்தில் இருந்து கட் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. ஆனால் அப்போது இந்த புகைப்படம் அப்துல் கலாம் குடும்ப புகைபடம் இல்லை என அவர் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். மேலும் கலாம் சிறுவனாக இருந்த போது புகைப்படம் எடுத்துக் கொண்டது கிடையாது எனவும் இது போலியானது எனவும் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் யார் எனவே தெரியாத ஒரு குடும்பப்படம் முதலில் கலாம் புகைப்படமாக உருவெடுத்து அதன் பிறகு மோடியின் குடும்பமாக மாறி உள்ளது தெரிய வந்துள்ளது.