சென்னை:
டெல்டா பகுதி விவசாயகிளுக்கு சம்பா சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.
சட்டசபையில்  இன்று 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா பேசியது:
மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இல்லாததால் குறுவை நெல் சாகுபடிக்கு ஜுன் 12-ந்தேதி தண்ணீர் திறந்து விட இயலவில்லை. நடப்பு கோடை பருவத்தில் 6 டெல்டா மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்ததால் நிலத்தடி நீரைக் கொண்டு சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக 54 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான குறுவை சாகுபடித் திட்டம் ஒன்றை 1.6.2016 அன்று நான் அறிவித்தேன். இதன் காரணமாக, கணிசமான பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இயல்பான பருவமழை மற்றும் மேட்டூர் அணைக்கு தேவையான நீர் கிடைக்கப்பெறும்போது டெல்டா மாவட்டங்களில் சம்பா பருவத்தில் நெற்பயிர் சுமார் 14 லட்சத்து 93 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நாற்று நடவு முறை மூலம் சாகுபடி செய்யப்படும்.
நான் ஏற்கெனவே தெரிவித்தபடி, உச்சநீதிமன்றத்தில் நமக்கு சாதமான தீர்ப்பினைப் பெற்று, சம்பா சாகுபடிக்கு விரைவில் தண்ணீர் திறக்க முடியும் என நான் நம்புகிறேன்.
எனினும், ஒரு நல்ல அரசு என்பது எத்தகைய இடர்ப்பாடுகளையும் எதிர் கொள்ளும் வகையில் திட்டங்களை செயல்படுத்தக் கூடிய அரசாக இருக்க வேண்டும். எனவே, எதிர்வரும் வடகிழக்கு பருவமழையிலும், குறைவான மழை மற்றும் நமக்குத் தேவையான அளவு தண்ணீர் மேட்டூர் அணையில் கிடைக்கப் பெறாத சூழ்நிலையிலும், டெல்டா விவசாயிகள் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகக் கூடாது என்பதால், சம்பா சாகுபடிக்கென ஒரு சிறப்பு திட்டத்தை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மாத இறுதிக்குள் சம்பா பயிருக்குத் தேவையான தண்ணீர் மேட்டூர் அணையில் கிடைக்கப் பெறவில்லை எனில், நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடி மேற்கொள்வதற்கு ஒரு தொகுப்பு திட்டத்தை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தும்.
cm
1) விவசாயிகள் நெல் விதைப்பு மேற்கொள்வதற்காக தரிசு உழவுப் பணிகளுக்கு மானியம் வழங்கப்படும். ஏக்கர் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் இந்த மானியம் வழங்கப்படும். இதற்கென 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2) விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகள் பெற ஏதுவாக விதைகளுக்கு கிலோ ஒன்றுக்கு, பத்து ரூபாய் மானியம் வழங்கப்படும். இதற்கென 4 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
3) இயந்திர முறையில் நெல் விதைப்பு மேற்கொள்ள ஏக்கர் ஒன்றுக்கு 600 ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படும். இதற்கென 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
4) நேரடி நெல் விதைப்பு மேற்கொள்ளப்படும் இடங்களில், களை பாதிப்பு அதிகளவு இருக்கும் என்பதால் களைக்கொல்லி மருந்து தெளிக்க, ஏக்கருக்கு 280 ரூபாய் மானியம் வழங்கப்படும். இதற்கென 9 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
5) நடவு இயந்திரம் மூலம், நடவு மேற்கொள்ளப்படும் இடங்களில் ஏக்கர் ஒன்றுக்கு 2000 ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படும். இதற்கென 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
6) துத்தநாகச் சத்து குறைபாட்டினால் நெல் மகசூல் குறையும் என்பதால், இத்தகைய குறைபாடுள்ள வயல்களில், துத்தநாக சல்பேட் பயன்படுத்த ஏக்கருக்கு 200 ரூபாய் வீதம் மானியம் வழங்கப்படும். இதற்கென 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மொத்தத்தில் போதுமான தண்ணீர் கிடைக்காத நிலையில், நேரடி நெல் சாகுபடி மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையில், நான் தற்போது தெரிவித்தபடி, சம்பா சாகுபடிக்காக 64 கோடியே 30 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
இவ்வாறு   அவர் பேசினார்.