சைக்கிள் சின்னம் எனது கையெழுத்து போன்றது: முலாயம் சிங் உருக்கம்

Must read

டெல்லி:

சமாஜ்வாடியின் தேர்தல் சின்னமான சைக்கிள் எனது கையெழுத்தை போன்றது என்று முலாயம் சிங் தெரிவித்துள்ளார்.

விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் முலாயம் சிங்கை தேசிய தலைவராக கொண்ட சமாஜ்வாடி ஆளும் கட்சியாக உள்ளது. முலாயம் சிங் யாதவின் மகன் அகிலேஷ் யாதவ் முதல்–மந்திரியாக உள்ளார். மாநில தலைவர் பதவியை அவருடைய சித்தப்பா சிவபால் சிங் வகித்து வருகிறார். சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் கடந்த சில மாதங்களாகவே அகிலேஷ் யாதவுக்கும், சிவபால் சிங்கிற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

சிவபால் சிங்கின் இன்னொரு சகோதரர் ராம்கோபால் யாதவ், அகிலேஷ் யாதவுக்கு பக்கபலமாக செயல்பட்டு வருகிறார். கட்சியில் குழப்பம் மிகவும் அதிகரித்து உள்ளது. ராம்கோபால் யாதவ் தலைமையில் நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் சமாஜ்வாடி கட்சியின் தேசிய தலைவர் பதவியில் இருந்து முலாயம் சிங் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக முதல்–மந்திரி அகிலேஷ் யாதவ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார். இதனால் சமாஜ்வாடி 2 ஆக உடைவது உறுதியாகி விட்டது. ராம்கோபால் யாதவ் கூட்டிய கட்சியின் தேசிய செயற்குழு சட்டவிரோதமானது என்று முலாயம் சிங் அறிவித்தார்.

முலாயம் சிங்குக்கும், அகிலேஷ் யாதவுக்கும் இடையே நடக்கும் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்து இருப்பதால் சமாஜ்வாடி கட்சி 2 ஆக உடையும் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே இருதரப்பும் சைக்கிள் சின்னத்திற்காக தேர்தல் ஆணையத்தை நாட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

மோதல் உச்சம் அடைந்து உள்ளநிலையில் முலாயம் சிங் யாதவ் கூறுகையில், நான் எந்த தவறும் செய்ததாக யாரும் குற்றம் £ட்டமுடியாது. ஊழல்களில் ஈடுபட்டது கிடையாது. யாருக்கும் துரோகம் செய்தது கிடையாது. மேலும் சைக்கிள் சின்னமானது எங்களுடையது. சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் சின்னமானது என்னுடைய கையெழுத்து என்று முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். ஜனவரி 5-ம் தேதி நடைபெறுவதாக இருந்த கட்சி தலைவர்கள் கூட்டத்தை முலாயம் சிங் யாதவ் ரத்து செய்து உள்ளார்.

More articles

Latest article