பெங்களூரு:

சோலார் மின் தகடு முறைகேடு வழக்கில் கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.


கேரளத்தில் சோலார் மின் திட்டத்தைச் செயல்படுத்த அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்திடம் செலுத்தியிருந்த வைப்புத் தொகை ரூ.1.60 கோடியைத் திரும்பப் பெற்றுத் தரக் கோரி பெங்களூரு பெருநகர நீதிமன்றத்தில் அதே ஊரைச் சேர்ந்த தொழிலதிபர் குருவில்லா, கடந்த 2015-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சோலார் மின்திட்டத்தை செயல்படுத்தாத காரணத்தால் உம்மன்சாண்டி உள்ளிட்ட 6 பேரும், அந்த தனியார் நிறுவனமும் இணைந்து, குருவில்லாவுக்கு ரூ.1.60 கோடியை 12 சதவீத வட்டியுடன் சேர்த்துத் தர வேண்டும் என்று கடந்த அக்டோபரில் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்த உம்மன்சாண்டி, தனது கருத்து கேட்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்காக, கடந்த மாதம் 13-ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் உம்மன்சாண்டி ஆஜராகவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.ஆர்.சென்னகேசவா முன் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக, நீதிமன்றத்தில் உம்மன்சாண்டி நேரில் ஆஜரானார்.

வழக்கு தொடர்பாக, உம்மன்சாண்டி தரப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்துக்கும், தங்களுக்கு கொடுத்திருக்கும் அதன் நகலுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாக குருவில்லா தரப்பு வக்கீல் வாதிட்டார். எனவே, உம்மன் சாண்டி தரப்பு அளித்த அந்த நகலை படிப்பதற்கு கால அவகாசம் அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை 9-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் நேரில் ஆஜராக வேண்டும் என்று உம்மன்சாண்டிக்கு உத்தரவிட்டார்.