லக்னோ:

உ.பி. மாநில காங்கிரசுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளதால் அங்குள்ள அரசியல் கட்சிகள் மிரண்டுபோய் உள்ளன.

இந்த நிலையில், சமாஜ்வாதி- பகுஜன் கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர்  அகிலேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு குறித்து  பேச்சு வார்த்தைகள் நடத்தி வருகின்றன. உ.பி. மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில்  தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவை ஒதுக்கி வைத்துவிட்டு, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. அதற்கான தொகுதி பங்கீடும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் தனித்து தேர்தலை எதிர்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக  பிரியங்கா காந்தியை ராகுல்காந்தி நியமனம் செய்து அறிவித்தார். மேலும், அவரை  உ.பி. மாநிலத்தின் கிழக்கு பகுதியின் பொறுப்பாளராகவும் நியமித்து களமிறக்கி உள்ளார்.

பிரியங்கா காந்தியின் அரசியல் பிரவேசம் காங்கிரஸ் கட்சியினருக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமாக களமிறங்கி பணியாற்ற தொடங்கி உள்ளனர். உ.பி. மாநிலத்தில் பிரியங்காவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. விரைவில் அவர் அங்கு தனது பணியை தொடங்க உள்ளார்.

பிரியங்கா வரவை எதிர்பார்க்காத பாஜக உள்பட மாற்று  கட்சியினர், பிரியங்காவின் அரசியல் அதிரடி உறுதி செய்யப்பட்டு விட்டதால் கலக்கத்தில் மிரட்டுபோய் உள்ளன.

இந்த நிலையில், உ.பி. மாநிலத்தில்  சமாஜ்வாதி- பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டுமென ராகுலுக்கு அகிலேஷ் யாதவ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பா.ஜ.க.வை வலிமையுடன் எதிர்க்க வேண்டுமெனில் சமாஜ்வாதி – பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க ராகுல் காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகிலேஷ் யாதவ்  கோரியுள்ளார்.