சென்னை: தமிழ்நாட்டில் வசூல் ஆகாத ரூ.28,000 கோடி வரியை வசூலிக்க ‘சமாதான் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் முதன்முறையாக இ-பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது,

2021-22 ஆம் ஆண்டிற்கு நிதிப் பற்றாக்குறை, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.33 சதவீதம் என, பதினைந்தாவது நிதிக் குழுவால் வரையறுக்கப்பட்ட ஒட்டு மொத்த விதிகளுக்குள் நிதிப்பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும்.

தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி விகிதத்தை அதிகரிப்பதே நாம் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான சீர்திருத்தம்.

வெள்ளை அறிக்கையின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு, 2006-07 ஆம் ஆண்டில் 8.48 சதவீதமாக இருந்த தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வரி விகிதம் 2020-21 ஆம் ஆண்டில் வெறும் 5.46 சதவீதம் என 3.02 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

தற்போதுள்ள மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில், இது சுமார் 65,000 கோடி ரூபாய்க்கும் மேலான வருவாய் இழப்பைக் குறிக்கிறது. இது இந்த மாநிலத்தால் சரி செய்ய வேண்டிய இழப்பாகும்.

தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரி உள்ளிட்ட பழைய வரிகளில் நிலுவையிலுள்ள 28,000 கோடி ரூபாயை வசூலிக்க எளிமையாக, அரசிற்கு பலனளிக்கக்கூடிய விதமாக “சமாதான் திட்டம்” விரைவில் அறிவிக்கப்படும். இந்த திட்டத்தின்மூலம் நிலுவையில் உள்ள வரிகளை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கூறினார்.