டெல்லி

தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வந்த சாம் பிட்ரோடா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் அயலக அணித்தலைவர் சாம் பிட்ரோடா இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களை நிறத்தின் அடிப்படையில் பல்வேறு நாட்டு மக்களோடு ஒப்பிட்டு ப் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தவிர

”இந்தியாவின் வடக்கில் உள்ள மக்கள் வெள்ளையர்கள் போலவும், கிழக்கில் உள்ள மக்கள் சீனர்கள் போலவும்,  மேற்கில் உள்ள மக்கள் அரேபியர்களை போலவும், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களை போலவும் உள்ளனர்.  இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல.  அனைவரும் சகோதர சகோதரிகள்” 

எனவும் காங்கிரஸ் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோடா தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவின் மரபு வழி சொத்துவரி பற்றி இந்தியாவிலும் விவாதிக்க வேண்டும் என சாம் பிட்ரோடா ஏற்கனவே பேசி சர்ச்சையில் சிக்கினார். தற்போது சாம் பிட்ரோடா மக்களை நிறத்தின் அடிப்படையில் ஒப்பிட்டு பேசியது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது. இந்த இரு விவகாரங்களிலும் காங்கிரஸ் கட்சி சாம் பிட்ரோடாவின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்தது.

நேற்று தெலங்கானாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி,

“சாம் பிட்ரோடா கூறிய கருத்துக்கு நான் மிகவும் கோபமாக உள்ளேன்.  இந்த இனவெறி மனப்பான்மையை நாங்கள் ஏற்க மாட்டோம்.  தோலின் நிறத்தின் அடிப்படையில் ஒருவரின் தகுதியை நாம் தீர்மானிக்க முடியுமா? என் மக்களை இப்படிக் கேவலமாகப் பார்க்க, ராகுல் காந்தியை அனுமதித்தது யார்?”

என உரையாற்றினார்.

சாம் பிட்ரோடாவின் கருத்துத்கு எதிராக காங்கிரஸ் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். நேற்று காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் பதவியை சாம் பிட்ரோடா தனது சொந்த விருப்பத்தின் பேரில் விலக முடிவு செய்துள்ளார். காங்கிரஸ் கட்சி அவரது முடிவை ஏற்றுக்கொண்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது X தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.