salem-nagartchi
சேலம் நகராட்சியின் 150வது ஆண்டு
சேலம் நகராட்சி ஆரம்பித்து 150 ஆண்டுகள் உருண்டோடி உள்ளது.  சேலம் நகராட்சி 1966ம் ஆண்டு நூற்றாண்டை நிறைவு செய்தது. தற்போது 2016ம் ஆண்டு 150வது ஆண்டாகும். இந்நகராட்சி 01.06.1994 முதல் மாநகராட்சி  யாக உயர்வு பெற்று, தற்போது மாநகராட்சியாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பெண் புலவரான ஔவையார் பிறந்த இடம் சேலம்  எனக் கூறப்படுகின்றது.
சேலம் – பெயர்க்காரணம்
சேலம் என்ற சொல் ‘சைலம்’ மற்றும் ‘ஷைல்ய’ என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. ‘சேலம்’ என்றால் ‘மலைகள் சூழ்ந்த இடம்’ என்று பொருள். சேலை நெசவில் பெயர்பெற்று சேலையூர் என்ற பெயர் சேலம் என காலப்போக்கில் மருவியது எனவும் கூறுவர்.
இவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் ‘சேரலம்’ என்பது ‘சேலம்’ ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் “சாலிய சேரமண்டலம்” எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது.
சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாடில் இருந்தது. பிற்பாடு 1768 ல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்பு 1799ல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது.
ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக சேலம் விளங்கிற்று. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது, கோட்டைப்பகுதி தற்போது நகரின் மைய பகுதியாக உள்ளது.
சேலம் மாவட்டம் கொங்குநாட்டின் ஒரு பகுதியாக பண்டைய நாட்களில் இருந்து வந்துள்ளது. அதற்கு முன்னர் அதியமான் ஆட்சிப் பகுதியில் இருந்து வந்துள்ளது.
சேலம் மாவட்டத்தின் வரலாறு பழமையானது. இங்கு புதிய கற்கால மனிதன் பயன்படுத்திய கோடரிகள், சுத்திகள், பானைகள், தேய்ப்புக் கற்கள், வளையல்கள் போன்றவை சேர்வராயன், கல்ராயன், வத்தலமலை, மேலகிரி, குட்டிராயன் மலை முதலிய பகுதியில் கிடைத்திருக்கிறது. எண்ணற்ற நடுகற்கள் கிடைத்திருக்கின்றது. இம்மாவட்டம் தர்மபுரி அதியமான்கள், சோழர்கள், கன்னடர்கள், நாயக்கர்கள், திப்புசுல்தான், ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.
பிரிட்டீஷ் கிழக்கிந்தியக் கம்பெனி படைக்கும் திப்பு சுல்தானுக்கும் இடையே 1792ல் நடைபெற்ற போரைத் தொடர்ந்து ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.
இதன் அடிப்படையில் திப்புசுல்தானிடம் இருந்து பெறப்பட்ட பகுதிகளைக் கொண்டு ‘பாரமஹால் மற்றும் சேலம்’ மாவட்டம் 1792ல் உருவாக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கொண்டு பாரமஹால் (12 சமஸ்தானங்கள்) மற்றும் சேலம் மாவட்டத்தின் கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பார மஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராகக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
1801ல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டது. பின்னர் 1808ல் இ.ஆர்.ஹார்கிரேவ் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்தபோது இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மாவட்டத் தலைநகர் தர்மபுரியில் இருந்து சேலத்திற்கு 1830ல் மாற்றப்பட்டது.
தொடர்ந்து சில ஆண்டுகள் தலைநகர் ஓசூருக்கு மாற்றப்பட்டாலும்கூட, 1860ல் ஆட்சித் தலைவர் அலுவலகம் மீண்டும் சேலத்திற்கு மாற்றப்பட்டது.
1965ல் சேலத்தில் இருந்து சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கப்பட்டு, தர்மபுரி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது.
1996 மே மாதம் சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
சேலம் மாநகராட்சி எல்லைகள்
சேலம் மாநகராட்சி எல்லைகள் 01.04.79 முதல் சூரமங்கலம் நகராட்சி, ஜாரிகொண்டாலம்பட்டி, கண்ணங்குறிச்சி பேரூராட்சிகளும் மற்றும் 21 கிராம ஊராட்சிகளும் இணைந்தது.
இதன் பரப்புளவு 93.34 ச.கிமீ கொண்டாதாக விரிவுப்படுத்தப்பட்டது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 6,97,061 ஆகும்.
நவம்பர் மாதம் 1ம் தேதி சேலம் நகராட்சி துவங்கிய நாள்.. 150வது ஆண்டு என்பதால் விமர்சையாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
1859ல் சேலம் மாவட்டத்தில் காவல்துறை ஆரம்பிக்கப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனை 1858 ம் ஆண்டு துவங்கப்பட்டது. 1866 சேலம் நகராட்சி துவங்கப்பட்டது.
1862ல் சேலம் சிறைச்சாலை கட்டப்பட்டது. அலெக்சாண்டர் ரீடு என்பவர் சேலம் மாவட்ட முதல் கலெக்டர். 1792.
சேலத்தில் 1925ல் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தை மகாத்மா காந்தி திறந்து வைத்தார்.
இதுதான் அவரது முதல் வருகை. 1911 சூரமங்கலம் டூ செவ்வாய்பேட்டை ரயில்வே லைன் அமைக்கப்பட்டது.
1917 டவுன் ரயில்வே ஸ்டேஷன் கட்டப்பட்டது.  1917 ராஜாஜி நகராட்சி சேர்மன் ஆனார்.  1917 ஏற்காடு மான்போர்ட் பள்ளி கட்டப்பட்டது.
1976 சேலம் மியூசியம் ஆரம்பிக்கப்பட்டது.  தரமான சேலம் தேனிரும்பிற்காக 1830 ல் East India Iron and Steel Company ஆரம்பிக்கப்பட்டது.
இங்கிருந்து உலக நாடுகள் அனைத்திற்கும் ஸ்டீல் ஏற்றுமதி செய்யப்பட்டது.  1862ல் சேலம் அரசு கலைக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
அப்பர் கிபி 6ம் நூற்றாண்டில் சேலத்தில் உள்ள சைவ கோவில்களுக்கு வருகை புரிந்தார்.
கிபி 1311ல் மாலிக்கபூர் தென்னாட்டு செல்வங்களை கொள்ளை அடித்துக்கொண்டு சேலம் வழியாக தொப்பூர் கணவாயை கடந்தார். அதாவது அதியமான் பெருவழியில்.
1862ல் ஏற்காடு – சேலம் சாலை அமைக்கப்பட்டது.  இயக்கப்பட்ட முதல் பேருந்து NS
சேலம் மாவட்ட முதல் தினசரி பத்திரிக்கை தினத்தாள்.  1976ஆம் அரசு மகளிர் கலைக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
கிபி முதலாம் நூற்றாண்டில் ரோமானியர் சேலம் வருகை புரிந்தனர். இங்கிருந்து மிளகு சந்தனம், எஃகு ( salem steel) ஆகியவற்றை வாங்கிக் கொண்டு சென்றதாக கூறுகின்றனர்…
தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக மையம் ஆகும். சேலம்
சேலம், பிரபலமான சுற்றுலா மற்றும் வழிபாட்டுத்தலமாகும். இந்நகர், கோட்டை மாரியம்மன் கோயில், தாரமங்கலம் கோயில், சேலம் சுகவனேஸ்வரர் கோயில், அருள்மிகு அழகிரிநாதர் கோயில், எல்லைப்பிடாரி அம்மன் கோயில், ஜாமா மஸ்ஜீத் போன்ற பல வழிபாட்டுத் தலங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது.
மிகப் பிரபலமான சுற்றுலாத் தலங்களான ஏற்காடு மலை, கிளியூர் நீர் வீழ்ச்சி, தாரமங்கலம் மற்றும் மேட்டூர் அணை ஆகிய இடங்கள், சேலத்திற்கு மிக அருகில் அமைந்திருப்பதனால், இவ்விடங்களுக்கு சேலத்தில் இருந்து எளிதாகச் செல்லலாம்.
சேலம் ஒரு பிரபலமான வணிக மையமாகவும் இருக்கின்றது. இந்நகரம் நாடு முழுவதும் பிரபலமாக இருக்கும் வெள்ளிக் கொலுசுகளையும், உலகம் முழுக்க ஏற்றுமதி செய்யப்படும் தரமான துணிவகைகளையும் உற்பத்தி செய்கிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் பருத்தி மற்றும் பட்டு துணிகளினால், சேலம், மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. இங்கு வந்தால் இவற்றை மலிவான விலையில் வாங்கலாம்.
மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை ‘மாங்கனி நகரம்’ என்றும் அழைப்பார்கள். மலைகள் சூழ்ந்த மாநகர். மாம்பழமும், பச்சரிசியும் இந்த நகரின் பெயரைச் சொன்னவுடனேயே நம் நினைவுக்கு வந்து, நாவை நனைக்கும்.
சேலத்தின் வடக்கே நாகர் மலை, தெற்கே ஜீரக மலை, மேற்கே காஞ்சன மலை, கிழக்கே கொடுமலை என நாற்புறமும் மலை சூழ்ந்த எழில் நகரம். ஏற்காடு, சேர்வராயன் மலை, மேட்டுர் அணை, சங்ககிரிக் கோட்டை என சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் ஏராளம்.
சி.வி. ராஜகோபாலசாரியார், சி. விஜயராகவாச்சாரி, ராமசாமி உடையார் ஆகியோர் இம்மாநகரத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.