திண்டுக்கலில் உள்ள ஒரு நெசவாலையில் பணிபுரியும் ஏழை பெண்களுக்கு அங்குள்ள ஆண் சூப்பர்வைசர்கள் மோசமான பாலியல் தொல்லைகள் கொடுப்பதாக அங்கு பணி புரியும் ஆறு பெண்கள் சமூகநலத்துறை அதிகாரிக்கு ஒரு எட்டுப்பக்க புகார் அளித்துள்ளனர்.

sex_abuse

அவர்களது பாலியல் அத்துமீறல்களுக்கு வேறு வழியின்றி உடன்படும் சில பெண்களுக்கு சலுகைகள் அள்ளி வழங்கப்படுகின்றன. உடன்படாத பல பெண்களுக்கு பணி நேரம் நீட்டிப்பு செய்யப்படுகிறது, ஊதியம் வேண்டுமென்றே குறைக்கப்படுகிறது. நாங்கள் மிக மோசமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகிறோம், தினந்தோறும் நாங்கள் படும் அவலங்களை யாரிடம் கொட்டித் தீர்ப்பதென்று தெரியவில்லை. எங்களுக்கு உதவுங்கள் என்று கண்ணீருடன் அந்த புகார் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக பெண்கள் வேலையைவிட்டு வெளியேறிய பின்புதான் இதுபோன்ற புகார் அளிப்பார்கள், பணியிலிருக்கும்போதே பெண்கள் துணிந்து புகார் அளிக்க வந்தது இதுவே முதன்முறை என்று தமிழக பெண்கள் ஜவுளி மற்றும் பொது தொழில் சங்கத்தின் பிரதிநிதி எஸ் திவ்யராக்கினி கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் தலித் சமூகத்தை சேர்ந்த படிப்பறிவற்ற ஏழைப் பெண்களாவர். தமிழகத்தில் கிட்டத்தட்ட 2,000 யூனிட்டுகளில் மூன்று லட்சம் பேர் வேலை செய்கின்றனர். இவர்கள் டையிங் யூனிட்டுகள், நெசவாலைகள் மற்றும் ஆடை தைக்கும் தொழிற்சாலைகளில் மிக குறைந்த ஊதியத்துக்கு வேலை பார்ப்பவர்களாவர். இங்கு இவர்கள் பாடுபட்டு வியர்வை சிந்தி உருவாக்கும் ஆடைகள்தான் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள ஷாப்பிங் மால்களில் உள்ள ஷோரூம்களை அலங்கரிக்கின்றன.
திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார்கோட்டையில் கிட்டத்தட்ட 100 பெண்கல் வேலை பார்க்கும் ராமா ஸ்பின்னிங் மில் என்ற ஒரு தொழிற்சாலை உள்ளது. அங்குள்ள ஆண்கள் எங்களை சொல்ல நா கூசும் ஆபாச வார்த்தைகளை பேசி துன்புறுத்துகிறார்கள், தங்கள் பாலியல் இச்சைகளுக்கு எங்களை பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள்.
எங்கள் மில் அதிபரிடம் எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்கள் வேறு ஊரில் வசிக்கிறார்கள். அவர்களுக்கு மேனேஜர்களுடன் மட்டுமே நேரடி தொடர்பு இருக்கிறது. நாங்கள் ஓவர்டைம் வேலை செய்வதையோ, சம்பளம் கட் செய்வதைப் பற்றியோகூட கவலைப்படவில்லை ஆனால் இந்தப் பாலியல் தொல்லையைத்தான் எங்களால் தாங்க முடியவில்லை என்று கதறுகின்றனர்.
இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கவிருப்பதாக திண்டுக்கல் சமூகநலத்துறை அதிகாரி ஜி.சாந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.