சேலம்

சேலத்தைச் சேர்ந்த ஒரு தம்பதி 350 பேரிடம் பணத்தை இரட்டிப்பாக்குவதாக ஆசை காட்டி ரூ.23 கோடி மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் நகரில் சூரமங்களம் பகுதியில் வசிப்பவர் 38 வயதான மணிவண்ணன்.  இவர் மனைவி 32 வயதான இந்துமதி.   இவர்கள் இருவரும் தங்களிடம் முதலீடு செய்யும் பணத்தை ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு இரட்டிப்பாக திருப்பித் தருவதாக ஆசை காட்டி உள்ளனர்.   அத்துடன் தங்களுக்கு முகவர்களாக அவர்களின் உறவினர் மற்றும் நண்பர்களையும் பணியில் அமர்த்தி உள்ளனர்.

இவர்களது அலுவலகமான ஆர் எம் வி குரூப் சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரில் உள்ளது.  இவர்கள் இருவரையும் நம்பி பலர் முதலீடு செய்துள்ளனர்.   மணிவண்ணன் தன்னை யாராவது சந்திக்க வரும்போது கட்டுக் கட்டாக ரொக்கத்தை அவர்கள் பார்க்கும்படி மேஜையில் வைத்துள்ளார்.  இதனால் அவரை மிகவும் நம்பி பலரும் முதலீடு செய்துள்ளனர்.   இவ்வாறு ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை முதலீடுகளைப் பெற்றுள்ளனர்.

இந்த பணத்தைக் கொண்டு மணிவண்ணன் மற்றும் இந்துமதி ஆகிய இருவரும் சிங்கப்பூர், துபாய் மலேசியா உள்ளிட்ட பல நாடுகளில் ஜாலியாக சுற்றி வந்துள்ளனர். முதலீட்டாளர்களுக்குப் பணம் திரும்பக் கிடைக்காததால் புகார் அளித்துள்ளனர்.   அதையொட்டி இவர்கள் அலுவலகத்தில் காவல்துறையினர் சோதனை இட்டுள்ளனர்.  இந்த சோதனையில் இவர்கள் 350க்கும் மேற்பட்டோரிடம் மொத்தம் ரூ.23 கோடி மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.

இதையொட்டி இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களிடம் இருந்து ரூ.50000 ரொக்கம், இரு லாப்டாப்புகள், இரண்டு டாப்லட்டுகள், 13 மொபைல்கள், இரு சொகுசுக் கார்கள், 10 சவரன் தங்கச் சங்கிலி, இரு தங்க வளையல்கள், மற்றும் சொத்துப் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.