சென்னையில், பிரிவியூ தியேட்டர்கள், ஜிம்கள், பார்ட்டி மொட்டை மாடிகள், ரூப்-டாப் பார்பிக்யூ, நீச்சல் குளங்கள், தியானம், யோகா செய்வதற்கான இடம் மற்றும் பல வசதிகளுடன் கூடிய ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளின் தேர்வு அதிகரித்து வருகிறது.

2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நகரத்தில் ஆடம்பர வீடுகள் விற்பனை அதிகரித்துள்ளதாக அனராக் (ANAROCK) ஆய்வுக்கு குழு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

2022ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 1370 வீடுகள் மட்டுமே விற்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இதுவரை 3330 வீடுகள் விற்பனையாகி உள்ளது.

நாடு முழுவதும் ஆடம்பர வீடுகளின் விற்பனை அதிகரித்து வருவதாக அனராக் ப்ராபர்டி கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் சென்னை பிரிவு தலைவரும் மூத்த துணைத் தலைவருமான சஞ்சய் சுக் கூறினார். “சென்னையில், பில்டர்கள் முன்பு மலிவு விலை வீடுகளில் கவனம் செலுத்தினர். இப்போது பலர் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப ஆடம்பரப் பிரிவில் நுழைகிறார்கள், ”என்று சுக் கூறினார்.

“நுங்கம்பாக்கம், அடையாறு, ஆழ்வார்பேட்டை, அடையாறு மற்றும் அண்ணாநகர் போன்ற பகுதிகளில் விற்கப்படும் பெரும்பாலான சொகுசு வீடுகள், சதுர அடிக்கு 15,000 முதல் 20,000 வரை விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. போயஸ் கார்டன் மற்றும் போட் கிளப் சாலையில் ஒரு சதுர அடி 35000 முதல் 40,000 வரை விற்பனையானது,” என்று அவர் மேலும் கூறினார்.

புறநகர்ப் பகுதிகளுக்குச் செல்வதை விட நகரின் மையப் பகுதியில் அடுத்தகட்ட ஆடம்பர வாழ்க்கையை விரும்பும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவதற்கு ஏற்ப இதுபோன்ற ஆடம்பர சொகுசு குடியிருப்புகளின் விற்பனையும் அதிகரித்துவருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

“முன்பு சுதந்திரமான வீடுகளில் வாழ்ந்தவர்கள், குறிப்பாக வயதானவர்கள், தற்போது அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்க விரும்புகின்றனர், ஏனெனில் பராமரிப்புப் பிரச்சினைகள் எதுவும் இல்லை மற்றும் முழுவதும் பாதுகாப்பு உள்ளது. முக்கிய இடங்களில் உள்ள பங்களாக்களில் வசிக்கும் பல வசதியான குடும்பங்கள் தங்கள் சொத்துக்களை மீண்டும் அபிவிருத்தி செய்வதன் மூலமோ அல்லது ரியல் எஸ்டேட்காரர்களுக்கு விற்பதன் மூலமோ பணமாக்க முடிவு செய்துள்ளன,” என்பதும் ஒரு காரணமாக உள்ளது.