இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.

இதனையடுத்து இந்திய அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் குறித்து அனைத்து தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியில் அஸ்வின் ரவிச்சந்திரனை சேர்க்காதது குறித்து விமர்சித்துள்ளார்.

“ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் முதல் நாளிலேயே ஆட்டத்தை தங்களுக்கு சாதகமாகக்க உறுதியான அடித்தளத்தை அமைத்தனர். ஆட்டத்தில் நிலைத்திருக்க இந்தியா முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் பேட்டிங் செய்ய வேண்டியிருந்தது, ஆனால் அவர்களால் முடியவில்லை.

டீம் இந்தியாவிற்கு சில நல்ல தருணங்கள் இருந்தன, ஆனால் தற்போது உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பந்து வீச்சாளராக இருக்கும் அஷ்வின் விளையாடும் XI இல் இருந்து விலக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று தனது ட்விட்டரில் சச்சின் பதிவிட்டுள்ளார்.

“தவிர, ஆஸ்திரேலியாவின் டாப் 8 பேட்ஸ்மேன்களில் 5 இடது கை வீரர்கள் இருந்த நிலையில் சுழற்பந்து வீச்சாளர் இடம்பெற்றிருந்தால் அது இந்திய அணிக்கு கைகொடுத்திருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது” என்றும் கூறியுள்ளார்.

பொதுவாக அணியின் செயல்பாடுகள் குறித்து எந்தவொரு விமர்சனமும் தெரிவிக்காமல் விலகி இருக்கும் சச்சின், WTC இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தோல்வியை ஜீரணிக்க முடியாமல் பதிவிட்டிருக்கும் இந்த கருத்து இந்திய ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.