தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் பிரதமராக வர வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபம் என தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

மேட்டூர் அணையை திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பாஜக ஆட்சியில் எந்த திட்டமும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது கூட்டணியில் இருந்த திமுக என்னென்ன திட்டங்கள் கொண்டு வந்தோம் என நாங்கள் கொடுத்த பட்டியலை முழுமையாக படிக்கவில்லையா?

பாஜக-வின் 9 ஆண்டு ஆட்சியில் எந்த சிறப்பு திட்டமும் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்தது என்று கேள்வி கேட்டேன். நான் கேட்ட எந்த கேள்விக்கும் அமித்ஷா பதில் அளிக்கவில்லை.

திமுக ஆட்சியில் இருந்தவரை எய்ம்ஸ் என்ற ஒன்றே தேவைப்படவில்லை, மருத்துவ சேவை தரமாக இருந்தது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை அறிவித்தது ஒன்றிய அரசு, அதனால்தான் என்ன ஆனது என்று கேள்வி கேட்டேன்?

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டுக்கு எண்ணற்ற திட்டங்கள் கிடைத்தன. காங்கிரஸ் ஆட்சியில் தான் சென்னை மெட்ரோ ரயில் திட்டம், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து போன்றவை கொண்டுவரப்பட்டது. தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம் காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் வந்தது.

சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதுதான் வந்தது.

தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனம், சேது சமுத்திர திட்டம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன ஆராய்ச்சி மையம் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது.

திமுக ஆட்சியில் கட்டப்பட்ட கோயம்பேடு பேருந்து நிலையத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார், திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக அவர் மாற்றினார்.

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை வெளிப்படையாக எதிர்த்த ஜெயலலிதா, பின்னர் கல்வெட்டில் தனது பெயரைப் பொறித்து திறந்து வைத்தார். இந்த வரலாறு எல்லாம் எடப்பாடி பழனிசாமிக்கு தெரிய வாய்ப்பு இல்லை” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

தவிர, “தமிழரை பிரதமராக்க வேண்டும் என அமித்ஷா கூறியது வரவேற்கத்தக்கது. பிரதமர் மோடி மீது அமித்ஷாவுக்கு என்ன கோபமோ என்று தெரியவில்லை” என்றும் கூறினார்.