திருவனந்தபுரம்: மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி திறக்கப்படும் என திருவிதாங்கோடு தேவசம்போர்டு அறிவித்து உள்ளது. ஏற்கனவே மண்டல பூஜைக்கான ஆன்லைன் பதிவு அக்டோபர் மாதம் 8ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதுதொடர்பாக திருவிதாங்கோடு தேவசம்போர்டு வெளியிட்டுள்ள தகவலில், மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும்,  நவம்பர் 17 முதல் டிசம்பர் 27-ம் தேதி வரை சபரிமலை கோயிலில் மண்டல பூஜை நடைபெறும். மண்டல பூஜை நிறைவடைந்தபின் டிசம்பர் 27-ம் தேதி சபரிமலை கோயில் நடை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், மண்டலபூஜைக்கு வரும் பக்தர்கள்  பக்தர்கள் ஆன்லைன்மூலம் பதிவு செய்ய, சபரிமலையின் http://www.sabarimalaonline.org என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு தொடங்கி  நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் அனந்தகோபன்,  சபரிமலை மண்டல மகரவிளக்கு யாத்திரை நவம்பர் 16-ந்தேதி மாலை தொடங்குகிறது. அன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். 17-ந்தேதி முதல் டிசம்பர் 27-ந்தேதி வரை மண்டல பூஜை நடக்கிறது. டிசம்பர் 27-ந்தேதி இரவு நடை அடைக்கப்படும்.
பின்னர், மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை நடை திறக்கப்பட்டு,  ஜனவரி 20-ந்தேதி வரை நடை திறந்து இருக்கும். மகரவிளக்கு ஜனவரி 14-ந்தேதி நடக்கிறது.
சபரிமலை ஐய்யப்பனை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சபரிமலை, பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் கேரள மாநில அரசு, தேவசம் துறை மற்றும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு இணைந்து ஆன்லைன் முன்பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதுதவிர 13 மையங்களில் உடனடி முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரத்தில் ஸ்ரீகண்டேஸ்வரம் சிவன் கோவில், கொல்லத்தில் கொட்டாரக்கரா மகாகணபதி கோவில், பத்தனம்திட்டாவில் நிலக்கல் அடிப்படை முகாம், பந்தளம் தர்ம சாஸ்தா கோவில், ஆலப்புழாவில் செங்கனூர் ரெயில் நிலையம், கோட்டயத்தில் எருமேலி கோவில், எட்டூமானூர் மகாதேவர் கோவில், வைக்கம் மகாதேவர் கோவில், எர்ணாகுளத்தில் பெரும்பாவூர், கீழில்லம், இடுக்கியில் குமுளி, மூழிக்கல், வண்டிப்பெரியார் ஆகிய இடங்களில் தரிசனம் செய்வதற்கு பதிவு செய்யலாம்.
நடப்பாண்டு மண்டல பூஜைக்கு  சபரிமலை தரிசனத்துக்கான பக்தர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படவில்லை. தரிசனத்திற்கு வரும் அனைத்து ஐய்யப்ப பக்தர்களும் தங்கள் அசல் ஆதார் அட்டையை சரிபார்ப்புக்காக எடுத்துச்செல்ல வேண்டும். ஐய்யப்ப பக்தர்களுக்கு எந்தவிதமான கொரோனா பரிசோதனை சான்றிதழ் தேவையில்லை. சபரிமலை செல்லும் வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் பயோ டாய்லெட்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், சபரிமலை செல்லும் வழியில் பல்வேறு இடங்களில் மருத்துவம் மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்துள்ளது. சன்னிதானத்தில் ஐய்யப்ப பக்தர்கள் ஓய்வெடுக்கவும், இரவு தங்குவதற்கும் ஏற்பாடு செய்து உள்ளோம். அப்பம், அரவணை, அபிஷேகம், நெய் போன்ற பிரசாதங்கள் வழங்க சிறப்பு கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மண்டல மகரவிளக்கு விழாவையொட்டி சன்னிதானம், நிலக்கல், பம்பை ஆகிய இடங்களில் சிறப்பு தேவசம் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பம்பை நதி மற்றும் சபரிமலை செல்லும் வனப்பாதையில் உள்ள நீராடல் படிகளில் தேவையான மின் விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
பம்பை ஆற்றின் ஆழம் குறித்த அறிவிப்பு பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.   இந்த மண்டல மகரவிளக்கு யாத்திரையில் கொரோனா சூழலுக்கு பிறகு முதன்முறையாக வனப்பாதை புல்மேடு மற்றும் எருமேலி, அழுதா, கரிமலை பாதை பக்தர்களுக்காக திறக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இந்த வழியில் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு வசதிகளை திருவிதாங்கூர் தேவசம் போர்டு செய்யும்.
இந்த காட்டு வழி பகுதிகளில் ஷெட் மற்றும் இளைப்பாறும் வசதியையும் தேவசம் போர்டு ஏற்பாடு செய்யும். பக்தர்களுக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் மற்றும் தெற்கு ரெயில்வே மூலம் தேவையான போக்குவரத்து வசதிகள் செய்யப்படும்.  நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து சேவை இயங்கும். இதற்காக 200 பஸ்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் கேரளா போக்குவரத்து கழகம் சார்பில் 300 பஸ்களை பயன்படுத்தி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பம்பைக்கு இயக்கப்படுகிறது.
உடல் ஊனமுற்ற பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து சேவை இயக்கப்படும். பல்வேறு பகுதிகளில் உள்ள ஐய்யப்ப பக்தர்கள் குழுவிற்கு விருப்பமுள்ளவர்களுக்கு சிறப்பு சேவையை கேரளா அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு செய்துள்ளது. முன்பதிவு முறையை பக்தர்கள் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தார்.