சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு!!

சபரிமலை:

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் நாளை மாலை நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் கார்த்திகை மாத மண்டல பூஜைகள், மகரஜோதி விழாக்கள் சிறப்பானவை. இதில் பல மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். அதுமட்டுமன்றி மாதந்தோறும் இங்குச் சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான மண்டல பூஜைக்காக 15-ம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.

மறுநாள் (16-ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 3.30 மணி முதல் காலை 11.30 மணி வரை சுவாமி ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடை பெறும். உச்ச பூஜைக்கு பிறகு பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை 3 மணிக்கு திறக்கப்படும். இரவு 11 மணி வரை சுவாமி ஐயப்பனுக்கு விசே‌ஷ பூஜைகள் நடைபெறும். வருகிற 26-ம் தேதி பிரசித்திபெற்ற மண்டல பூஜை நடைபெறுகிறது.

ஒவ்வொரு வருடமும் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மக்களுக்குத் தேவையான வசதிகளை அவ்வப்போது கேரள அரசு மேம்படுத்தி வருகிறது. சுவாமி ஐயப்பன் கோயிலை தேசிய புனித யாத்திரை மையமாக அறிவிக்க வேண்டும் என்று தென் மாநில அரசுப் பிரதிநிதிகள் மாநாடு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

மேலும், இந்த ஆண்டு யாத்திரைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகத் கேரள தேவஸ்வம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் அவர் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு கோயில் வளாகத்திலேயே புதிய அம்சங்களுடன் கூடிய அரசு மருத்துவமனை மற்றும் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் அமர்ந்து உண்ணக்கூடிய பெரிய அறை உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. சபரிமலையில் உள்ள புனித நதியான பம்பை நதி தூய்மைப்படுத்தப்பட்டு படித்துறைகளும் சீரமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவம், குடிநீர், மின்விளக்கு போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு மண்டல பூஜைக்கு ஐயப்பன் கோயில் தயார் நிலையில் உள்ளது. சபரிமலையில் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்காக 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் வெளி மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்’’ என்றார்.
English Summary
Sabarimala Ayyappan Temple opening ceremony tomorrow