திருவனந்தபுரம்: மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோவில் நடை  இன்று மாலை திறக்கப்பட உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கு மறுத்த கேரள மாநில தேவசம் போர்டு, தொற்று பரவல் குறையத்தொடங்கியதும், கொரோனா கட்டுப்பாடுகளுடன் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து,  சபரிமலை கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கோவிலின் நடை இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல்சாந்திகள் பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி இன்று  நடைபெற்ற நிலையில்,நிலையில் நாளை மண்டல கால பூஜைகள் தொடங்குகிறது. ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை டிசம்பர் 26-ம் தேதியும்,  மகர பூஜை விளக்கு ஜனவரி 14ஆம் தேதியும் நடைபெற உள்ள நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் கோவில் நடை திறக்கப்படுகிறது.

இதுகுறித்து தேவசம் போர்டு வெளியிட்டுள்ள தகவலில், மண்டல பூஜைக்காக  நாளை முதல் வழக்கமான பூஜைகள்  நடைபெறும் என்றும்,  சபரிமலைக்கு தினசரி 30ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாகவும், ஆன்லைன் மூலம் அனுமதி பெற வேண்டும் என்பதுடன், பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் பக்தர்கள் நீராட அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் பாதுகாப்பு பணிக்கு, சபரிமலை சன்னிதானம், பம்பை மற்றும் நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பணிக்கு 7,500 போலீசார் நியமிக்கப்படுவார்கள் என்றும், காலை முதல் பகல் 12 மணிவரை சாமிக்கு அபிஷேகம் செய்யவும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.